ஆராய்ச்சி95

புலர்த்தலும், நகில்களில் தொய்யில் எழுதிக்கொள்ளுதலும் வழக்கம். தட்டான் பட்டறையிலே தாமே முன்னிருந்து ஆபரணம் செய்விப்பரென்று ஒரு செய்யுளிற் புலப்படுத்துகின்றனர்.

    குழந்தைகளுக்கும் மகளிருக்கும் பிறருக்கும் உரியனவாகிய ஆபரணங்கள் பலவற்றை இவ்வாசிரியர் உணர்த்தியுள்ளார்; அவை வருமாறு: அரைஞாண், அரைமணி, அரைவடம், ஆரம், இலைமுகப்பூண், உடைதாரம், ஒட்டியாணம், கச்சை, கலாபம், கழல், கிண்கிணி, குண்டலம், குதம்பை, குழை, கேயூரம், கைவளை, சரி, சன்னவீரம், சிலம்பு, சிறுதொடி, சுடிகை, சூடகம், சூழியம், சூளாமணி, தமனியக்கொப்பு, தரள உத்தரியம், தலைமாலை, தொடலைக்குறுந்தொடி, தோள்வளை, நடுநாயகமணி, நித்திலச்சுட்டி, பட்டம், பாடகம், பிறையென்னுமாபரணம், புயவலயம், பொட்டு, பொற்குதம்பை, பொற்பட்டம், மரக்குழை, மகரகுண்டலம், மங்கலநாண், மணிமுடி, மணிமேகலை, முத்துக்கச்சு, முத்துக்குதம்பை, முதாரி, முற்றிழை, மேகலை, வாளி முதலியன.

    மகளிர் குழந்தைகளை உச்சிமோப்பதும், காலிற் கிடத்திக் குளிப்பாட்டுதலும், வாயிதழ் நெரித்துப் பாலூட்டுதலும், துடையிற்கண்வளர்த்தலும், முத்தாடுதலும், குஞ்சி திருத்தளும், முகந்துடைத்தலும் சொல்லப்படுகின்றன.

    நாணத்தால் தலைகுனிதலும், கடைக்கண்ணால் நோக்குதலும், நகிற்கண்ணே பார்த்தலும், கவலைமிகுதியால் கன்னத்தை உள்ளங்கையாற் றாங்கி நிற்றலும் மகளிர் இயல்பு. அவர்களுடைய முதற் கற்பை ஒரு பாட்டிற் குறிப்பிக்கின்றார் (105); பொதுமகள், குலமகள், கைம்பெண் என்னும் மூவர் இயல்பும் இன்னவென்று ஒரு செய்யுளில் (271) புலப்படுத்துகின்றார். மகளிரது அழகு பல வேறு விதமாக வருணிக்கப்படுகின்றது.

    கன்னிமகளிர் சந்திரனை எருவிட்டிறைஞ்சுதல், கணவனைப் பிரிந்த மகளிர் கூடலிழைத்துப் பார்த்தல, மகளிர் காமபானம் செய்தல், கணவர் இறந்துபடின் மார்பில் அறைந்துகொள்ளுதல், பல்லாண்டிசைத்தல் என்னும் மரபுகள் இவர் செய்யுட்களில் வந்துள்ளன.

    “காதோலை பாலித்த தயவாளர்” என்பது மகளிரது ஓலை திருமங்கலநாணைப் போன்ற மங்கலமுடையதாக்க் கருதப்பட்ட அரிய வழக்கைத் தெரிவிக்கின்றது.