104குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

    அவாவறுத்துத் தவம்புரிந்து மெய்யறிவு பெற்ற இம்முனிவர் விளக்கும் இத்தகைய கருத்துக்கள் பன்முறையும் ஆராய்ந்து பயன்படுத்தற்குரியன.

சமய உணர்ச்சியும் தெய்வ பக்தியும்

    சைவசமயத்தில் உதித்துச் சைவ ஆசிரியர் ஒருவருக்கு அடியவராகிச் சைவ சந்நியாசம் பூண்டு வாழ்ந்த இவருடைய சைவப் பற்றும், சைவசித்தாந்த நூற்பயிற்சியும், மூர்த்தி தலந்தீர்த்தங்களிலுள்ள அன்பும், குருபக்தியும், தொண்டர்பாலுள்ள பெருமதிப்பும் அளவிடற் கரியவை.

சைவ சித்தாந்தக் கருத்துக்கள்

    சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இவருடைய வாக்கிற் பல உருவங்களில் இடையிடையே மிடைந்து விளங்குகின்றன. பதி பசு பாசங்களென்னும் முப்பொருள்களின் இயல்பைச் சித்தாந்த நூல்களின் கருத்துக்கிணங்க அமைத்துச் சொல்கின்றார்: ’ பதி, நாதமும் நாதாந்தமுடிவும் நவைதீர்ந்த போதமும் காணாத போதமாய் ஆதிநடு அந்தங்கடந்து சச்சிதானந்த மயமாகி இயல்பாகவே பாசத்தினின்றும் நீங்கிய பரஞ்சுடராய் மிளிர்வது; தனக்கென ஒரு குறியும் குணமும் போலம் இன்றி எங்கும் செறிந்திருப்பது; அறிவுக்கு அநாதியாகவும் ஐந்தொழிற்கும் அப்புறத்ததாகவும் மனம் முதலியவற்றிற்கு எட்டாததாகவும் இருப்பது; பஞ்சவித ரூப பரசுகமாய்ப் பூரணமாய் நித்தமாய் இலகுவது; இந்திரசாலம் புரிவோன் எல்லோரையும் தான் மயக்கினும் அம்மயக்கத்தில் தான் சாராமல் நிற்பதுபோல் ஓட்டற நிற்கும் இயல்பினது; கருவின்றி நின்ற கருவாகவும் உருவின்றி நின்ற உருவாகவும் விளங்குவது; ஓச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்னும் மூன்றையும் திரிகரணங்களாகக் கொண்டு சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வது; பக்குவ ஆன்மாக்களுக்கு அருள்செய்யும் பொருட்டுத் தானே குருவாக வருவது; உயிர்கள் உய்யும் பொருட்டுப் பஞ்ச கிருத்தியங்களை நடத்துவது; காலத்தொடு கற்பனை கடந்து ஒளிர்வது; துவாத சாந்தப் பெருவெளியில் துரியங்கடந்த பரநாத மூலத்தலத்தில் முளைத்த முழு முதலாவது’ எனப் பதியின் இலக்கணங்களை விரிக்கின்றார்.

    பசுக்களாகிய ஆன்மாக்கள் அநாதியாகவே பாயத்தாற் கட்டுண்டு நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறவியுள்