106குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

    சைவசித்தாந்தத்தின் சிறப்பைப் பண்டார மும்மணிக்கோவையில் ஒரு செய்யுளில் விரிவாக உரைக்கின்றார்: “இறைவன் உயிர்த்தொகுதிகள் உய்யும் பொருட்டுச் சுத்தமாயை யென்னும் வயலினிடையே அருளாகிய வித்தையிட்டுக் கருணையாகிய நீரைப் பாய்ச்சி வேதமென்னும் மரத்தை வளர்த்தான். அம்மரத்தினைச் சார்ந்தவர்களுள் பலர் இலைகொண்டு உவந்தனர்; பலர் தளிர் கொண்டு உவந்தனர்; ஏனையோர் அரும்பும் மலரும் பிஞ்சும் காயும் கொணர்ந்து உவந்தனர். இங்ஙனம் இருப்ப வேதாந்த மென்னும் உச்சியிலே பழுத்த இன்பந்தரும் அருங்கனி பிழிந்து அதன் சாரங்கொண்ட சைவசித்தாந்தமாகிய தேனை நுகர்ந்தனர் சிலரே” (575) என்று இவர் அங்கே கூறுகின்றார். இதன்கண் சைவசித்தாந்தத்தின் தனிப் பெருமையை இவர் விளக்கியிருத்தல் அறிந்து மகிழ்தற்குரியது.

“மறைமுடிவாஞ் சைவம்”
(1:104-5)
எனவும்,
“அருட்பெருஞ் சைவம்”
(566)
எனவும்,
“திவ்வியம் பழுத்த சைவசித் தாந்தம்”
(569)
எனவும் அதனைப் பாராட்டுவர்.
    உருத்திராக்கம் திருநீறு என்னும் சிவ சின்னங்களையும் பஞ்சாட்சரத்தையும் சில சில இடங்களிற் குறிப்பிடுவர்; உருத்திராக்கத்தைக் கண்டிகையென்பர் (1 : 55, 565); திருநீற்றை வெண்பொடி, வெண்ணீறு, வெண்பலி, வெண்சாந்து, பூதி என்பர்; திரிபுண்டரத்தைச் சில விடங்களிற் குறித்துச் செல்வர் (1 ; 38, 14, 136). பஞ்சாட்சரத்தை,

“ஐந்தெழுத்தைக் கூறி”
(1 ; 68-9)
என்றவிடத்துக் குறித்ததோடு “கலைமறைக்கு நாயகமா மஞ்சக் கரம்” (630) என்று சிறப்பிப்பர்.

சம்பிரதாயம்

    சைவசம்பிரதாயப்படி இவர் வழங்கும் சொற்களில் சில: அடிகள், திருக்கூத்து, திருச்சாந்து, திருச்செவி, திருநடம், திருமுன், திருமேனி, திருவடி, திருவமுது, திருவரை, திருவுலா. தாம் ஒன்றை விண்ணப்பித்துக் கொள்ளும்போது,