ஆராய்ச்சி107

“பொன்னடிக் கொன்றிது பன்னுவன் கேண்மதி”
(469)
“............................. திருவடிக் கீழ்ச்
 சொல்லுவதொன்றிது சொலக்கேண்மதி”
(556)
என்று கூறுதலும். ஆணவமலத்தை மகரமென்றலும் (666) சைவ சம்பிரதாயத்தைச் சார்ந்தனவே.

குருபக்தி

    தம்முடைய ஞானதேசிகராகிய தருமை மாசிலாமணி தேசிகரைப் பரசிவமாகவே மரபுபற்றிப் பாராட்டுவர். இவருடைய குருபக்தியின் சிறப்பைப் பண்டாரமும்மணிக்கோவை தெளிவாக எடுத்துக்காட்டும். குருபரம்பரையினர் அனைவரையும் ஒருவராகவே பாவித்தல் மரபாதலின் இவரும் தம் ஆசிரியரைக் கமலை ஞானப்பிரகாசராகவும் தருமை ஞானசம்பந்தராகவும் பாராட்டுகின்றார். இம்முனிவர் பிரானுடைய புகழுக்குரியவராகிய அப்பெரியார் நூன்முறை பயின்ற அறிஞரென்பதும், தமிழ்க் கவிஞரென்பதும், கல்விப்பிரசங்கம் செய்பவரென்பதும் இவர் வாக்கால் அறியப்படுகின்றன. தருமபுர ஆதீனத்தில் வழிபடப்பெறும் மூர்த்தி சொக்கலிங்கப் பெருமானென்பதை 587-ஆம் செய்யுளில் உணர்த்துகின்றார்.

திருத்தொண்டர்கள் பாலன்பு

    இவர் திருத்தொண்டர்கள் பாலும் பெருமதிப்புடையவராக விளங்குகின்றார்; சிவபக்தர்கள் அரவொலி செய்தலை 4-ஆம் செய்யளிற் குறிக்கின்றார். அவர்களுடைய திருவுள்ளத்தை,

“சிவமணங்கமழ விண்ட தொண்டர்
 மானத்த் தடமலர்ப் பொற்கோயில்”
(55)
என்பர்; அவர்கள் விண்மிசை யுலகையும் வேண்டாரென்றும் (530) யமபாயமில்லாதவரென்றும் (333) கூறுவர்; சிவஞானிகளை விழித்துறஙகுந் தொண்டரெனவும், ஆனந்தத் திரைக்கடல் மடுத்துழக்குஞ் செல்வச் செருக்கர்களெனவும் புகழ்வர்.

“நற்றவத் தொண்டர் கூட்டம்
 பெற்றவர்க் குண்டோ பெறத்தகா தனவே”
(460)
என்று தொண்டர் தொடர்பின் பயனைக் கூறுவர்.
    சைவசமய ஆசிரியர்களுள் ஞானசம்பந்தர் முதலியோருடைய வரலாறுகளும் பெருமைகளும் இவருடைய வாக்கில் வந்துள்ளனர்.