116குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

தடாதகாதேவி, பாண்டிப் பிராட்டி, மங்கையர்க்கரசி, மகரத்துவச முயர்த்த பொலங்கொடி, மதுராபுரித் தலைவி, மதுரைக்காரசு, மதுரைப் பெருமாட்டி, மரகதவல்லி, மலயத்துவசன் வளர்த்த பசுங்கிளி, மாணிக்கவல்லி, மும்முலைத் திரு, வழுதிமகள், வைகைத் துறைவி, வைகைவள நாட்டரசு

    மீனாட்சியம்மை அரசாண்ட சிறப்பையும் (13, 32), திக்கு விஜயச் சிறப்பையும் (30, 33, 35, 39, 40, 41, 99) பலவிடங்களில் எடுத்துரைப்பர்.

    இவரது வாக்கில் வந்துள்ள மதுரைத் திருவிளையாடற் செய்திகள் வருமாறு:

    சோமசுந்தரக் கடவுள் அங்கம் வெட்டியது, இந்திரன் பழி தீர்த்தது, இறையனாரகப் பொருள் நூலை அருளியது, உக்கிர பாண்டியருக்கு வேலளித்தது, உலவாக்கோட்டையருளியது, கரிக்குருவிக்கு அருள் செய்தது, கல்லானைக்குக் கரும்பருத்தியது, கால்மாறி யாடியது, ஞானசம்பந்தரது ஏடு வையையில் எதிரேறச் செய்தது, தருமிக்குப் பொற்கிழியளித்தது, நரியைப் பரியாக்கியது, நாரைக்கு முத்தி கொடுத்தது, பழியஞ்சியது, பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்தது, பாண்டியன் சுரந்தீர்த்தது, பாணபத்திரருக்குப் பலகையிட்டது, பிட்டுண்டது, மண் சுமந்தது, மாபாதகந் தீர்த்தது, மாமிக்குக் கடல் வருவித்தது, யானை யெய்தது, வலை வீசியது, வளை விற்றது, விருத்த குமார பாலரானது, விறகு விற்றது, வெள்ளை யானை சாபந் தீர்த்தது, முருகக் கடவுள் உக்கிர குமாரராகியது, அவர் கடல் சுவற வேல் விட்டது. மேகத்திற்குத் தளையிட்டது முதலியன.

திருவாரூர்

    திருவாரூரை அந்தணாரூர், ஆரூர், கமலாலயம், கமலை யென்பர்; அது மண்மகளின் இதய கமலமாதலையும், அங்குள்ளார் சிவகணங்களாகத் தோற்றுதலையும், அத்தலத்திற் பிறத்தால் முத்தியுண்டென்பதையும் கூறுவர். அங்குள்ள ஆழித்தேரின் சிறப்பும் (309), ஆலயமாகிய பூங்கோயிலின் பெருமையும், திருமதிற்பெற்றியும், தேவாசிரயனென்னும் காவணத்தின் உயர்வும், செங்கழு நீரோடையின் புகழும் உரைக்கப்பெறுகின்றன.