அத்தலத்தில் வன்மீக நாதர் புற்றிற் கோயில் கொண்டெழுந்தருளியிருத்தலை ஒரு செய்யுளிற் கூறுவர் (342); தியாகேசர் சோமாஸ்கந்த மூர்த்தியென்பதைச் சிலவிடங்களிற் புலப்படுத்துவர் (312, 339, 345); அவர் திருமாலின் மார்பிலிருந்து பூவுலகுக்கு எழுந்தருளிய வரலாற்றையும் (348), அரசு வீற்றிருந்ததையும் (332), சுந்தரமூர்த்திநாயனாரின் பொருட்டுப் பரவைநாச்சியார்பால் இருமுறை தூதுசென்றதையும் உரைக்கின்றார்; அவரை அருமைப்பெருமாள், இருந்தாடுபவர், கமலேசர், கமலைப்பிரான், கிண்கிணிக் காலழகர், செல்வத்தியாகர், தியாகேசர், தேவரகண்டர், வீதிவிடங்கர் என்னும் திருநாமங்களாற் குறிப்பர்.
சிதம்பரத்தைத் தில்லை, தெய்வப்புலியூர், புண்டரீகாரம், புலியூர், பெரும்பற்றப் புலியூரென்னும் நாமங்களாற் குறிப்பர்; அத்தலம் விராட்புருடனது உள்ளக்கமல மென்பர்; அங்கே எழுந்தருளியுள்ள கற்பக விநாயகரையும், கோவிந்தராசப் பெருமாளையும் பற்றிய செய்திகளைக் கூறுவர்; நடராசப் பெருமான் திருநடம் புரியும் திருச்சிற்றம்பலத்தை அம்பலம், கடவுண்மன்று, சிற்சபை, சிற்றம்பலம், புண்ணியப்பொது, பொது, பொற்றாது பொதிந்த சிற்சபை, பொன்மன்றம், மணிமன்று, மன்று என்பர். ஒரு செய்யுளில் சிற்றம்பலம், பேரம்பலம், பொன்னம்பலமென்பவற்றை ஒருங்கே யுரைத்தார்; இவை மூன்றும் சிதம்பரத்திலுள்ள வெவ்வேறு சபைகளாகும்.
நடராசப் பெருமானை அம்பலக்கூத்தன், அற்புதக் கூத்தன், வைதிக்க் கூத்தன் என்பர்; அவர் ஆடுந் திருக்கூத்தை அற்புதக் கூத்து, ஆனந்தநடம், தாண்டவம், பரமநாடகம், மாநாடகம் என்று புகழ்வர்; அத்திருநடனத் திருப்கோலம் ஓமெனும் எழுத்தின் வடிவையுடையதென்றும் ஐந்தொழிலையும் அறிவிப்பதென்றும் உரைப்பர்; பதஞ்சலிக்காக நடனம் புரிந்தருளியதையும், காளியோடு வாதுசெய்து ஊர்த்துவதாண்டவ மாடியதையும்,. பதஞ்சலியும் வியாக்கிர பாதரும் அருள்பெற்றதையும், உபமன்யு முனிவருக்குப் பாற்கடல் அருளியதையும், இடத்தாளைத் தூக்கியாடுதலையும் பராட்டுவர்; இடத்திருத்தாளைக் குஞ்சிதகமல மென்பர்.
திருநடனத்தைத் தம் உளக்கண்ணால் அனுபவித்த இம்முனிவர் பிறரையும் அக்காட்சி பெறும்படி ஒருசெய்யுளில் அறிவுறுத்துகின்றார்:
|