(517)
நடனதரிசனம் கண்டார் யமபயமிலராவ ரென்பதையும் முத்தியடைவ ரென்பதையும் சில செய்யுட்களால் தெரிவிக்கின்றார்.
புள்ளிருக்குவேளூராகிய வைத்தீசுவரன் கோயிலுக்குப் பல திருநாமங்கள் உண்டு. அவற்றுள் ஆதி, வயித்தியநாதபுரி, கந்தபுரி, குருகூர், சடாயுபுரி, தினகரபுரி, பருதிபுரி, புள்ளூர், வேதபுரி, வேளூரென்பன இவராற் கூறப்பெறுகின்றன. இங்கே எழுந்தருளியுள்ள கற்பக விநாயகரையும், வைத்திய நாதரையும், தையல்நாயகி யம்மையையும் இவர் பாராட்டுகின்றார். வைத்திய நாதரைத் தீராதவினை தீர்த்த தம்பிரானென்பர்; இத்தலத்துள்ள முருகக்கடவுளுக்குரிய முத்துக்குமாரர், சேனாபதியென்னும் திருநாமங்களை வெளியிடுவர்; இங்கே இராமர், இலக்குவன், எழுமுனிவர், சடாயு, சம்பாதி, சூரியன், வேதங்கள் பூசித்த செய்தியை யுரைப்பர்; சித்தாமிர்த்த தீர்த்தத்தைச் சிறப்பிப்பர். இந்தத் தலத்தில் திருக்கோயில் விபூதிக்குண்டத்திலிருந்து வெண்சாந்தெடுத்தும் அங்கசந்தானத் தீர்த்தத்தினின்று மண்ணெடுத்தும் உண்டோர் நோய்நீங்கிச் சுகம்பெறுதலையும் (414), பேய் பிடித்தோர் வந்து ஆடுதலையும் (416) இவர் தெரிவிக்கின்றனர்.
காசித்தலத்தை அவிமுத்தம் ஆனந்தவனம் என்றும், விசுவ நாதரை அகிலேசர் காசிநாதரென்றும், விசாலாட்சியம்மையைப் பெருந்தடங்கணம்மை ஆனந்தவல்லியென்றும் கூறுவர்; இங்குள்ள கங்கையையும் மணிகர்ணிகைத் துறையையும் சிறப்பிப்பர்.
இங்கே உயிர்கள் இறக்கும்போது விசுவநாதர் எழுந்தருளி வந்து பிரணவோபதேசம் செய்வரென்பதும் அவ்வுயிர்கள் சாரூபம் பெறுமென்பதும் பலவகை நயம்படச் சொல்லப் பெறுகின்றன. இத்தலத்தில் யமபயமின்மையும் வைரவக் கடவுளே இங்கே தண்டிக்கும் அதிகாரியாக உள்ளாரென்பதையும் இவர் உணர்த்துகின்றார்.