ஆராய்ச்சி119

பிறதலங்கள்

    இத்தலங்களையன்றிப் பிறதலங்களைப் பற்றிய செய்திகளும் இடையிடையே வருகின்றன.

    காஞ்சீபுரத்தில் அம்பிகை அறம்வளர்த்தமையும், அம்பிகை தழுவ இறைவன் குழைந்ததும், திருநெல்வேலியில் இறைவர் வேயீன்ற முத்தராக எழுந்தருளியதும், திருவிடைமருதூரில் தம்மைத் தாமே பூசித்துக்கொண்டதும், கயிலாயம், காளத்தி, பொதியில், முதுகுன்றம், மேருவென்னுமிடங்களில் எழுந்தருளியிருப்பதுமாகிய செய்திகளை இவர் செய்யுட்களிலே காணலாம்.

திருமால்

    சைவசமயக் கடவுளரைப் போற்றிப் பாராட்டும் இவர் ஏனைய தெய்வங்களையும் உரிய இடங்களிற் பரவிச் செல்கின்றார், திருமாலை,

    “பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல்” (3) “துழாய்முடித் தீர்த்தன்” (6) “திருவைப் புணர்பொற் புயமைப்புயல்” (176) “ஆழியான்” (179) “தாமரைக் கண்டுயிலுமால்” (184) “மலர் மடந்தை கொழுநர்” (323) “பொன்னுயிர்க் கொண்கன்” (326) “நடுமுதல்” (327) “பைந்துழாய் முகில்” (332) “கருங்கடல் வண்ணன்” (336) “வண்டுழாய் முகுந்தன்” (348) “பங்கயச் செல்வியிரு கொங்கைக் குவட்டுவளர் பச்சைப் பசுங்கொண்டல்” (350) “நேமியான்” (363) “முண்டகக் கண்ணன்” (384) “ஆதி நான்மறை வேதியற் பயந்த ....மாதவர்” (463) “மாயோன்” (463) “புயல்வண்ணப் பண்ணவன்” (538) “வாரித்தண் புனற்றுஞ்சும் மால்” (538) “மலர்மகள் கொழுநன் (539) “துழாய் முதல்” (544) “பைந்துழாய் மௌலிப் பண்ணவன்” (545) “வண்டுழு துழக்குந் தண்டுழாயலங்கற், புரவுபூண் டகிலம் பொதுக்கடிந் தளிக்கும், கருணை பூத் தலர்ந்த கமலக் கண்ணன்” (566) “அராவணையினறிதுயிலமர்ந்த கடவுள்” (569) “புருடோத்தமன்” (572) “கொண்டல் மணிவண்ணன்” (671) “துழாய்ப் படலை விடலை” (672) என்னும் தொடர்களால் குறிப்பர்.

    அவருடைய திருமார்பில் திருமகளும் திருத்துடையிற் பூமி தேவியும் இருத்தலை ஓரிடத்தில் உய்த்துணரவைப்பர் (105),