120குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

அவர் புட்கொடி கொள்ளுதலும் (206), பீதாம்பர முடைமையும் (326), மோகினி யுருவமெடுத்ததும் (695), தசாவதார மெடுத்ததும் (463) சொல்லப்படுகின்றன.

“கேசவன் கால்வீச வண்டகோ ளகைமுகடு
கீண்டுவெள் ளருவி பொங்கி”
(100)
என்பதில் திரிவிக்கிரமாவதாரச் செய்தியைக் காணலாம்.
“தம்பஞ் சுமந்தீன்ற மானிட விலங்கு”
(70),
“மானிட மடங்க றூணிடைத் தோன்றி
ஆடகப் பெயரி னவுணன்மார் பிடந்து
நீடுபைங் குடரி னிணங்கவர்ந் துண்டென
(312)
என்பவற்றில் நரசிங்காவதாரச் செய்தி வந்தது.
“மீனேறு குண்டகழி தீவாய் மடுத்ததனி வில்லியார்”
(364)
என்று இராமாவதாரத்தைச் சுட்டுவர்.
    கண்ணபிரானையும் அவர் செயலையும்,

“குடமொடு குடவியர் பாணிகைக் கோத்திடு ....................
 கார்முகச் சூற்புயல்”
(12)
“நின்றூதுங் குழலிசை பழகிய மழைமுகில்”
(22)
“புள்வாய் கிழித்த தூவியம்பு”
(318)
“செங்காற் கருங்கட் பைந்தொடியார்
     சிற்றாய்ப் பாடிப் பெருங்குடியிற்
றீம்பா றிருடிக் கட்டுண்டு
     திரியா வண்ணம்”
(354)
“விளங்கனி யொன்றெறி வெள்விடை”
(660)
என்பவற்றிற் குறித்துள்ளார்.

இந்திரன் முதலியோர்

    இந்தரன், இந்திராணி, காமன், குபேரன், சத்தமாதர், சூரியன், திருமகள், துர்க்கை, நந்திதேவர், பிரமன், முப்பத்து முக்கோடி தேவர், யமன், வருண்னென்னும், தெய்வங்களைப் பற்றிய செய்திகள் இவர் செய்யுட்களில் விரவிவரும்.

கலைமகள்

    கலைமகள்பால் இவர் பேரன்பு பூண்டவர். சகலகலாவல்லி மாலையெனப் பத்துச் செய்யுட்களாலும், இரண்டு பிள்ளைத் தமிழ்களிலுமுள்ள இரண்டு செய்யுட்களாலும் அப்பிராட்டியை நாவாரத் துதித்துப் புகழ்வதோடு வேறிடங்களிற் சார்த்து வகையானும் அவள் பெருமையை உணர்த்துகின்றார்;