பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்75

புயல்பாய் படப்பைத் தடம்பொழில்க ளன்றியேழ்
   பொழிலையு மொருங்கலைத்துப்
புறமூடு மண்டச் சுவர்த்தல மிடித்தப்
   புறக்கடன் மடுத்துழக்கிச்

செயல்பாய் கடற்றானை செங்களங் கொளவம்மை
   திக்குவிச யங்கொண்டநாள்
தெய்வக் கயற்கொடிக டிசைதிசை யெடுத்தெனத்
   திக்கெட்டு முட்டவெடிபோய்க்

கயல்பாய் குரம்பணை பெரும்பணைத் தமிழ்மதுரை
   காவலன் மகள்வருகவே.
கற்பகா டவியிற் கடப்பா டவிப்பொலி
   கயற்கணா யகிவருகவே.    
(3)

57.
வடம்பட்ட நின்றுணைக் கொங்கைக் குடங்கொட்டு
   மதுரவமு துண்டுகடைவாய்
வழியும்வெள் ளருவியென நிலவுபொழி கிம்புரி
   மருப்பிற் பொருப்பிடித்துத்

தடம்பட்ட பொற்றாது சிந்துரங் கும்பத்
   தலத்தணிவ தொப்பவப்பிச்
சலராசி யேழுந் தடக்கையின் முகந்துபின்
   தானநீ ரானிரப்பி

    (2) படப்பை - தோட்டக்கூறு. ஏழ் பொழில் - ஏழு தீவு; ஏழு சோலைகளென்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும். அண்டசை சுவர்த்தலம் - வானமாகிய சுவர். அப்புறக்கடலை - பெரும்புறக்கடல்.

    (3) தானை - அம்பிகையின் படை; (30.) செங்களம் கொள - இரத்தத்தாற் சிவந்த போர்க்களத்தைத் தனதாக்கிக் கொள்ள; இது வெற்றிபெற்றார் செய்யும் செயல். கயற்கொடிகள் - அம்பிகையின் துவசங்கள். எடுத்தென - எடுத்தாற்போல. வெடிபோய் - துள்ளிச்சென்று.

    (4) கயல் - எழுவாய். குரம்பு அணை - கரைகள் பொருந்திய. பெரும்பணை- பெரிய வயல். மதுரை காவலன் - பாண்டியன்; தொகுத்தல்.

    (முடிபு.) கயல், சிந்த மோதி அலைத்து இடித்து மடுத்து உழக்கி வெடிபோய்ப் பாயும் பணையென்க.

    57. இச்செய்யுளில் விநாயகக் கடவுளின் திருவிளையாடல் கூறப்படும்.

    (அடி. 1) வடம் - முத்து வடம். மதுர வமுது - இனிய பால். கொம்பின் ஒளிக்குப் பால் உவனமை. கிம்புரி - தந்தத்தில் அணியப்படும் பூண்.

    (2) பொற்றாதை அப்பி. சலராசி - கடல். தானநீர் - மதநீர்.