122குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

“என்னாவி லுறைந்த வெள்ளை
     வள்ளக் கமலத்தவள்....... இசைத்தனள்”
(597)
என்பதில் தம் நாவிலும் குடி கொண்டமையைப் புலப்படுத்துகின்றார். இவற்றால்இவர் கலைமகளின் திருவருட்குப் பாத்திரராகி நாவன்மை பெற்றவரென்பதை அறியலாகும். இல்லையெனிற் பரம சைவராகிய இவர்,

“விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
 கண்கண்ட தெய்வமு ளதோ சகல கலாவல்லியே”
(709)
என்பதற்கு நியாயமில்லையன்றோ?

சிறப்பியல்புகள்

    இதுகாறும் கூறிய செய்திகள் இம்முனிவர் பிரானது புலமையையும், உலகியலறிவையும், சமய ஞானத்தையும், தெய்வ பக்தியையும் விளக்கும். இவர் பாலமைந்துள்ள சிறப்பியல்புகள் சில இவருடைய சான்றாண்மையை நிலை நிறுத்தும் பெற்றியுடையனவாக உள்ளன.

அடக்கம்

    நிறைபுலமை சான்ற இவர் தம்முடைய இன்சுவை நிரம்பிய செய்யுட்களை,

“சிறிய வெனது புன்மொழி”
(4),
“என்பொருளில் புன்மொழி”
(312),
“என் புன்மொழிக்கடு”
(600),
என்று கூறிக்கொள்ளும்போது இவர் கல்விச் செருக்கு எட்டுணையுமில ரென்பது புலப்படுகின்றது.

    தவதொழுக்கத்திற் சிறந்த சீலத்தினராகிய இம்மனிவர் தம்மை,

“உரனில் காட்சி யிழுதையன்”
(457)
“செய்தவ வேட மெய்யிற் றாங்கிக்
கைதவ வொழுக்கமுள் வைத்துப் பொதிந்தும்”
(460)
“ஒருபெருந் தவமு முஞற்றிலன்”
(460)
“யானே புலனு நலனுமிலன்”
(502)
“தவமிலை பேதையேன்”
(581)
என்று கூறிக் கொள்ளுதலினாலும்,
“குற்றம் பலபொருத் தென்னையு மாண்டு
   கொண்டோன்”
(459)
என்பதனாலும் இவருடைய அடக்கம் விளக்கமாகின்றது.