ஆராய்ச்சி123

தொண்டர் உறவு வேண்டுதல்

    இவர் தொண்டரது உறவைப் பெரிதும் விரும்புபவர்; மதுரேசர்பால் அவருடைய,

"சிற்றடி யவர்க்கே குற்றேவல் தலைக்கொண்
 டம்மா கிடைத்தவா வென்று
 செம்மாப் புறூஉந் திறம்”
(105)
வேண்டி நிற்கின்றார்.
“ஒழுக்கம் நிறைந்த விழுப்பெருங் கேள்வி
 மெய்த்தவர் குழாத்தொடும் வைக”
(475)
வேண்டுமென்று நடராசப் பெருமானைப் பிரார்த்திக்கின்றார்.

    தம் ஆசிரியர்பால்,

“நின், பொன்னடித் துணைசேர் நின்னடித் தொண்டர்
 திருவமு தார்ந்து தெருக்கடை யெறிந்த
 பரிகல மாந்தியிப் பவக்கட லுழக்கும்
 வரனுடை ஞமலி யாகிநின்
 அருளையு மயரா தவதரிப்பது”
(569)
ஆகிய பிறப்பைத் தரின் திருமால்பதவி முதலியவற்றையும் விரும்பாமல் அதனை ஏற்பதாக்க் கூறுகின்றார்.

நிராசை

    இவர் உள்ளத்துறவும் நிராசையும் நிரம்பிய மெய்ஞ்ஞானச் செல்வர்; சிந்தையினிறைவே செல்வமென்றும் அவாவே நல்குரவென்றும் உணர்ந்தவர்; ஆதலின்,

“அவாவெனப் படுமவ்
 வறுமையி னின்றும் வாங்கி
 அறிவின் செல்வ மளித்தரு ளெனக்கே”
(475)
என நடராசப்பெருமானை வேண்டுகின்றார். இவர் தில்லை வாணரிடத்திற் கேட்கும் வரமொன்றுண்டு; அது வருமாறு:

“பெருங்குளிர்க் குடைந்த காலைக் கருந்துணி
 பலதொடுத் திசைத்த வொருதுணி யல்லது
 பிறிதொன்று கிடையா தாக வறுமனைக்
 கடைப்புறத் திண்ணை அல்லது கிடக்கைக்