124குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கிடம்பிறி தில்லை யாக கடும்பசிக்
குப்பின் றட்ட புற்கையூ ணல்லது
மற்றோ ருண்டி வாய்விட் டரற்றினும்
ஈகுந ரில்லை யாகநா ணாளும்
.................................................................இத்திறம்
உடனீங் களவு முதவிக் கடவுணின்
பெரும்பத மன்றியான் பிறிதொன்
றிரந்தனன் வேண்டினு மீந்திடா ததுவே”
(475).
இவருடைய நிராசையின் அளவு இத்தகையதென்பதை இச் செய்யுட்பகுதி தெளிவாக்க் காட்டும். “பிறப்பறுக்க லுற்றார்க் குடம்புமிகை” என்பதை இவர் நன்குணர்ந்து தம்முடைய துறவை மெய்த்துறவாக்கி நின்றவரென்பதில் ஐயமில்லை.

    குமரகுருபரர் கருவிலே அருளுடையவர்; பிறக்கும்போதே அருள் கூட்ட நல்லிளமையில் தமிழறிவும் தெய்வ பக்தியும் வாய்ந்த பலகலையும் அறிந்து தல வழிபாடு செய்தி ஞானாசிரியரது உபதேசம் பெற்றார். புலமையாற் பெற்ற பெருமையோடு தவவொழுக்கத்தாற் பெற்ற பெருமையும் சேர்ந்து ‘பொன்மலர் நாற்றமுடைத்து’ என்பதுபோல இவருடைய சிறப்பை மிகுதியாக்கியது. இவர் ஒரு சிறந்த பக்தர்; நிறைபுலமை யுடைய நாவலர்; உலகியலறிந்த பேரறிவாளர்; உயர்குணம் நிறைந்த தவச்சீலர்; பிறருக்கு நல்லுரை நவிலும் பெரியார். இவருக்குரிய நல்லியல்புகளை விளக்கிக்கொண்டும் தமிழ் நாட்டாரது உள்ளத்துக்கு உவகை யூட்டிக்கொண்டும் விளங்குவனவே இப்புத்தகத்திலுள்ள இன்சுவைச் செய்யுட்கள்.

குமரகுருபர முனிவருடைய புகழ் வாழ்க!