மூன்று தனிப் பிரபந்தங்களைப் பற்றிய குறிப்பு125

மூன்று தனிப் பிரபந்தங்களைப் பற்றிய குறிப்பு

1. மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை

    இரட்டைமணிமாலை யென்பது பவளமும் முத்தும் ஆகிய இருவேறு மணிகள் மிடைந்த மாலைபோல வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அந்தாதியாக அமையவும் ஈறும் முதலும் மண்டலிக்கவும் இருபது செய்யுட்களாற் பாடப்பெறும் பிரபந்தம். மதுரை மீனாட்சியம்மை விஷயமாகப் பாடப்பெற்றது இம் முதற் பிரபந்தம். இது முதல் மூன்றையும் இயற்றியவர் இன்னாரென்று தெரியவில்லை.

    இவ்விரட்டை மணிமாலையிலிருந்து இதன் ஆசிரியர் தேவி உபாசகரென்பதும் அவ்வுபாசனையால் வாக்குவன்மை பெற்றவரென்பதும் தெரியவருகின்றன. “இவட்காடல்வே றில்லை யெமைப், பாட்டுவிப்பதுங் கேட்பதும்” (7) என்பதும், “கற்பூர வல்லி கருத்திற் புகப் புகுந்தாள், நற்பூர வல்லியுமென் னா” (15), “வனைந்தாளெம் வாயுமனமும் ........நமது. சொற்பதமே நாறுஞ்சுவை” (17) என்பவையும் இவற்றை யுணர்த்தும். மீனாட்சியம்மை தம் மனத்தில் உறைவதைப் பலவிடத்தும் குறிக்கின்றனர்.

“நாவுண்டு நெஞ்சுண்டு நற்றமி ழுண்டு நயந்தசில
பாவுண் டினங்கள்பலவுமுண் டேபங்கிற் கொண்டிருந்தோர்
தேவுண் டுவக்கங் கடம்பா டவிப்பசுந் தேனின்பைந்தாட்
பூவுண்டு நாரொன் றிலையாந் தொடுத்துப் புனைவதற்கே”
என்னும் செய்யுள் படித்து மகிழ்ந்தற்குரியது.

2. மதுரை மீனாட்சியம்மை குறம்

    ஒரு குறத்தி குறிகூறுவதாக அமையும் பிரபந்தம் குறமென்று வழங்கும். கலம்பகத்திற் குறமென்று ஓரு உறுப்பு உண்டு; “இறப்பு நிகழ்வெதிர் வென்னுமுக் காலமும், திறப்படவுரைப்பது குறத்தி பாட்டே” என்பது பன்னிருபாட்டியற்சூத்திரம். அந்த இலக்கணம் அமைந்ததாகவே இக்குறமென்னும் பிரபந்தம் உள்ளது. இதில் இசைப்பாட்டும் கலந்து வந்தது. குறவஞ்சி யென்னும் பிரபந்தமொன்றும் குறத்தி குறிகூறும் செய்தியைக் கூறுவதே. ஆயினும் குறத்தில் குறத்தியின் கூற்று மாத்திரம் இருப்பக் குறவஞ்சியில் வேறு பலர் கூற்றுக்களும் இருக்கும்.