பக்கம் எண் :

80குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

உடுக்கும் புவனங் கடந்துநின்ற
   ஒருவன் றிருவுள் ளத்திலழ
கொழுக வெழுதிப் பார்த்திருக்கும்
   உயிரோ வியமே மதுகரம்வாய்

மடுக்குங் குழற்கா டேந்துமிள
   வஞ்சிக் கொடியே வருகவே.
மலயத் துவசன் பெற்றபெரு
   வாழ்வே வருக வருகவே.    
(9)

63.
பெருந்தே னிறைக்கு நறைக்கூந்தற்
   பிடியே வருக முழுஞானப்
பெருக்கே வருக பிறைமௌலிப்
   பெம்மான் முக்கட் சுடர்க்கிடுநல்

விருந்தே வருக மும்முதற்கும்
   வித்தே வருக வித்தின்றி
விளைந்த பரமா னந்தத்தின்
   விளைவே வருக பழமறையின்

குருந்தே வருக வருள்பழுத்த
   கொம்பே வருக திருக்கடைக்கண்
கொழித்த கருணைப் பெருவெள்ளம்
   குடைவார் பிறவிப் பெரும்பிணிக்கோர்

மருந்தே வருக பசுங்குதலை
   மழலைக் கிளியே வருகவே
மலயத் துவசன் பெற்றபெரு
   வாழ்வே வருக வருகவே.    
(10)

    (3) ஒருவன்-சிவபெருமான். உயிரோவியம்: “அத்தன் மனத்தெழுதிய வுயிரோவியம்” (80.) மதுகரம் - வண்டு.

    (4) குழலாகிய காடு: 701.

    63. (அடி, 1) (பி-ம்.) ‘உறைக்கும்’, இரைக்கும்’.

    (1-2) முக்கட் சுடர்க்கிடு விருந்து: 44-8. முக்கண்ணாகிய சுடர். மும்முதல் - பிரமன் முதலிய மும்மூர்த்திகள். (பி-ம்.) ‘விளைக்கும் பரமா னந்தத்தின்.’

    (3) குருந்து - குருத்து. (பி-ம்.) ‘அளிபழுத்த.’

    (3-4) பிறவிப்பிணிக்கோர் மருந்து: 22.