பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்81

7.அம்புலிப்பருவம்

64.
கண்டுபடு குதலைப் பசுங்கிளி யிவட்கொரு
   கலாபேத மென்னநின்னைக
கலைமறைகண் முறையிடுவ கண்டோ வலாதொண்
   கலாநிதி யெனத்தெரிந்தோ

வண்டுபடு தெரியற் றிருத்தாதை யார்மரபின்
   வழிமுத லெனக்குறித்தோ
வளர்சடை முடிக்கெந்தை தண்ணுறுங் கண்ணியா
   வைத்தது கடைப்பிடித்தோ

குண்டுபடு பாற்கடல் வருந்திருச் சேடியொடு
   கூடப் பிறந்ததோர்ந்தோ
கோமாட்டி யிவணின்னை வம்மெனக் கொம்மெனக்
   கூவிடப் பெற்றாயுனக்

கண்டுபடு சீரிதன் றாதலா லிவளுடன்
   அம்புலீ யாடவாவே
ஆணிப்பொன் வில்லிபுணர் மாணிக்க வல்லியுடன்
   அம்புலீ யாடவாவே.    
(1)

    64. அம்பிகை சந்திரனிடம் அன்பு பூணுவதற்குரிய காரணங்கள் சொல்லப்படும்.

    (அடி, 1) கண்டு - கற்கண்டு. படு: உவமவுருபு. அம்பிகையுன், சிவபெருமான்ப் போலவே எட்டு உருவங்களை யுடையளாதலின் அவ்வுருவங்களில் சந்திரன் ஒருவனென்பது குறித்து அவனை ஒரு கலாபேதமென்றார். முறையிடுவ - முறையிடுதல். கலாநிதி - கலைகளுக்கு இருப்பிடம், கலை- வித்தை, கிரணம்.

    (2) தாதையார் - பாண்டியர். வழிமுதல் - குலமுதல்வன் (71); “செருமாண் டென்னர் குலமுத லாதலின், அந்தி வானத்து வெண்பிறை தோன்றி” (சிலப். 4:22-3.) எந்தை - சிவபெருமான். கண்ணி - தலையிற் சூடும் மாலை; “மாதர்ப் பிறைக்கண்ணி யானை” (தே.)

    (3) குண்டு - ஆழம். திருச்சேடி - திருமகளாகிய தோழி. வம்மென - வாவென (72.) கொம்மென - விரைவாக.

    (4) அண்டுபடு - பொருந்தும். ஆணிப்பொன் - உரையாணிப் பொன்.