பக்கம் எண் :

92குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

77.
குலைபட்ட காந்தட் டளிர்க்கையிற் செம்மணி
   குயின்றவம் மனைநித்திலம்
கோத்தவம் மனைமுன் செலப்பின் செலுந்தன்மை
   கோகனக மனையாட்டிபாற்

கலைபட்ட வெண்சுடர்க் கடவுடோய்ந் தேகவது
   கண்டுகொண் டேபுழுங்கும்
காய்கதிர்க் கடவுளும் பின்றொடர்வ தேய்ப்பக்
   கறங்கருவி தூங்கவோங்கும்

மலைபட்ட வாரமும் வயிரமும் பிறவுமா
   மாமணித் திரளைவாரி
மறிதிரைக் கையா லெடுத்தெறிய நாற்கோட்டு
   மதகளிறு பிளிறியோடும்

அலைபட்ட வைகத் துறைச்சிறை யனப்பேடை
   அம்மான் யாடியருளே
ஆகங் கலந்தொருவர் பாகம் பகுந்தபெண்
   அம்மானை யாடியருளே.    
(4)

    77. அம்பிகை மாணிக்க அம்மானையும் முத்திழைத்த அம்மானையும் ஆடுதல் கூறப்படும்.

    (அடி, 1) குலைபட்ட காந்தள் - குலையாகப் பூத்த காந்தள் மலர். காந்தட்கை, தளிர்க்கை யென்க. செம்மணி குயின்ற - மாணிக்கம் பதித்த. செம்மணி குயின்ற அம்மனை முத்தாலாகிய அம்மனைக்குப் பின்னே சென்றது. கோகனக மனையாட்டி - தாமரை மலராகிய மனைவி.

    (2) வெண்சுடர்க் கடவுள் - சந்திரன். காய்கதிர்க் கடவுள் _ சூரியற். ஏய்ப்ப - ஒப்ப.

    (1-2) அம்பிகையின் திருக்கரத்திற்குத் தாமரையும், மாணிக்க வம்மானைக்குச் சூரியனும், முத்திழைத்த அம்மானைக்குச் சந்திரனும் உவமைகள்.

    (3) மலைபட்ட ஆரம் - மலையில் உண்டான முத்து. (பி-ம்.)’பிறவுமா மணித்திரளை வாரி வாரி’. நாற்கோட்டு மதகளிறு - ஐராவதம். (பி-ம்.) ‘மழகளிறு’.

    (4) அனப்பேடை: விளி.

    (முடிபு.) ஏய்ப்ப ஆடியருள் என்க.