முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
7. பெரியநாயகியம்மை கலித்துறை
பத்தர்க்கு நெஞ்ச மலர்மீ திருத்திப் பயந்துகொடுஞ்
சித்தர்க் ககற்றுநின் பாதாம் புயமொரு செஞ்சிலைமேல்
வைத்தற்கு மெண்ணி மதியுடையே னென்பன் வார்சடையான்
பித்தர்க்குத் தங்குண நூலினுஞ் செம்மை பெரியம்மையே.
(2)
இழைபொறுத் தாற்பொறை தானென்ப ரானல் லிசைப்புலவர்
மழைபொறுத் தார்புனன் முக்காற் பொறுக்கும் வழக்கதுண்டே
உழைபொறுத் தார்நல் லியற்பகை யார்மனைக் குற்றவொரு
பிழைபொறுத் தாய்நன்று காண்குன்றை வாழும் பெரியம்மையே.
(3)
கையன்று தாமரை கண்ணன் றிளமென் கயலெனவே
பொய்யன்று கங்கையை நீரென்று சாதிப்பர் போர்விடையார்
மெய்யென்று நீகொண் டிரேலற லாயினென் மென்கையிடைப்
பெய்யென்று பின்னை யறிவாய்தென் குன்றைப் பெரியம்மையே.
(4)
பொன்வாங்கு செஞ்சடைப் பாம்புகள் சுற்றும் புதுமதியி
னன்வாங்கு கோடு கிழிக்கு நகுவெண் டலைபடுங்கல்
முன்வாங்கு மெந்தைநின் பாதாம் புயத்தின் முடிவணங்கிற்
பின்வாங்கி நில்லன்ன மேகுன்றை வாழும் பெரியம்மையே.
(5)
கடிநறு மென்றரு மீதிருப் பாரெனக் கங்கையென்பாள்
முடிநடு வேறி யிருந்தனள் வேனின் முதிர்விலதன்
அடியடை வாரெனச் சங்கரன் பாங்க ரமர்ந்தனைநீ
பிடிநடை யேகுயி லேகுன்றை வாழும் பெரியம்மையே.
(6)
நின்போ லிலரரு ளாளரென் றேசொல நின்கொழுநன்
என்போ னொருவன் மகன்பூங் கழுத்தினை யீர்வலென்றே
அன்போர் சிறிது மிலனாகப் போக வதற்கிசைந்து
பின்போய் விடாதுகண் டாய்குன்றை வாழும் பெரியம்மையே.
(7)

2. இருத்தி அகற்றுமென இயையும். செஞ்சிலை-ஈண்டு அம்மி. மதி-அறிவு, சந்திரன். 3. புனலும் முக்காற்பொறுக்கும் வழக்குண்மையின் இழை பொறுத்தலாதியனவும் புலவரால் பொறையெனக் கூறப்படினும் அவை பொறையன்று. இப்பிழை பொறுத்ததே நற்பொறையென்பது. மழை-குளிர்ச்சி. உழை-மான்: 4. பொய்யன் றென்பதற்குப் பொய்யல்லையாம்படியென்க; யான் சொல்வது பொய்யல்ல என்றலுமாம். 5. பொன்வாங்கு-பொன்னைப்போல் விளங்கும். வணங்கில் சுற்றும் கிழிக்கும்படும் ஆகலின் பின்வாங்கி நில் என்றபடி: கல்-மேரு. 6. கடிநறு மென்தரு-மிகுமணம் வீசும் மெல்லிய மரம். பிடி-பெண்யானை. முதிர்வேனிலில் என்பது தாப்பிசையாய் நின்றது. 7. ஈர்வல்-அறுப்பேன். உடன் சொல்லாமையால் நின்போல அருளாளர் இலரென்று கூறச் செய்தனை என்பது.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்