முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
8. நன்னெறி
கடலே யனையம்யாங் கல்வியா லென்னும்
அடலே றனையசெருக் காழ்த்தி-விடலே
முனிக்கரசு கையான் முகந்து முழங்கும்
பனிக்கடலு முண்ணப் படும்.
(7)
உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக்
கொள்ளுங் குணமே குணமென்க-வெள்ளம்
தடுத்த லரிதோ தடங்கரைதான் பேர்த்து
விடுத்த லரிதோ விளம்பு.
(8)
மெலியோர் வலிய விரவலரை யஞ்சார்
வலியோர் தமைத்தா மருவிற்-பலியேல்
கடவு ளவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே
படர்சிறையப் புள்ளரசைப் பார்த்து.
(9)
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்-திங்கள்
கறையிருளை நீக்கக் கருதா துலகின்
நிறையிருளை நீக்குமே னின்று.
(10)
பொய்ப்புலன்க ளைந்துநோய் புல்லியர்பா லன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாந் துப்பிற்
சுழற்றுங்கொல் கற்றூணைச் சூறா வளிபோய்ச்
சுழற்றுஞ் சிறுபுன் துரும்பு.
(11)

7. அனையம்-ஒப்பாவேம். அடலேறு-வளமை தங்கிய காளை. முனிக்கரசு-அகத்தியர். பனிக்கடல்-குளிர்ச்சி பொருந்திய கடல். அகத்தியரைச் சிவபெருமான் தம்மை ஒத்தவராக விதந்த சிறப்புடைமையினென்க. 8. கவர்ந்து-வயப்படுத்திக் கொண்டு. ஓங்கு-மேன்மேல் உயருகின்ற; இங்குப் பெருகுகின்ற. தடங்கரை-பெரியகரை. 9. விரவலர்-பகைவர். மருவில்-பொருந்தினால். பலி-பிச்சை. புள்ளரசு-கருடன். விரவலரை ஐ அச்சப் பொருளின் வந்த இரண்டனுருபு. கட்செவி-பாம்பு. இது கண்களையே செவிகளாகக் கொண்டது; அதனால் இப்பெயர் பெற்றது. 10. விழுமியோர்-மேலோர். கறையிருள்-தன்னிடமுள்ள கறுத்த இருள். நிறையிருள்-மிகுதியான இருள். கறை-மாசு; களங்கம். நல்லோர் நிலாவைப்போலத் தங்கட்கு எவ்வளவு துன்பமிருந்தாலும் அதனைக் கருதாது பிறர் துன்பத்தை நீக்குவர். 11. புல்லியர்-இழிந்தோர். மெய்ப்புலவர்-மெய்யறிவாளர்கள். துப்பு-வலிமை. புலன்கள் ஐந்தாவன: மெய், வாய், கண், மூக்குச், செவி என்பன. இவைகளால் அறியப்படுவன, ஊறு, சுவை, உருவம், நாற்றம், ஓசை ஆவனவாம். அற்பர்கள் புலன்கள் வழிப்பட்டுத் துன்பப்படுவர், உண்மையறிவு வாய்ந்தவர்கள் அவைகளால் துன்பப்படார்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்