முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
8. நன்னெறி
தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று
தலையா யவர்செருக்குச் சார்தல்-இலையால்
இரைக்கும்வண் டூதுமல ரீர்ங்கோ தாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு.
(14)
எந்தைநல் கூர்ந்தா னிரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர்தம் மீகை மறுப்பரோ பைந்தொடீ
நின்று பயனுதவி நில்லா வரம்பையின்கீழ்க்
கன்று முதவுங் கனி.
(17)
இன்சொலா லன்றி யிருநீர் வியனுலகம்
வன்சொலா லென்று மகிழாதே-பொன்செய்
அதிர்வளையாய் பொங்கா தழற்கதிராற் றண்ணென்
கதிர்வரவாற் பொங்குங் கடல்.
(18)
நல்லோர் வரவா னகைமுகங்கொண் டின்புறீஇ
அல்லோர் வரவா னழுங்குவார்-வல்லோர்
திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்துஞ் சுழல்கால் வர.
(19)
பெரியவர்தந் நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியி னிழுதாவ ரென்க-தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிறவுறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.
(20)
எழுத்தறியார் கல்விப் பெருக்க மனைத்தும்
எழுத்தறிவார்க் காணி னிலையாம்-எழுத்தறிவார்
ஆயுங் கடவு ளவிர்சடைமுன் கண்டளவில்
வீயுஞ் சுரநீர் மிகை.
(21)

14. தொலையா-அழியாத. தலையாயவர்-நல்லியல்புடைய சான்றோர்கள். செருக்கு-ஆணவ முனைப்பு; அதைக் கர்வம் என்பர். இரைக்கும்-ஒலிக்கும். கோதை-இங்குப் பூமாலை; ஈர்ங்கோதை என்பது குளிர்ந்த பூமாலை. 17. நல்கூர்ந்தான்-வறுமையடைந்தான். அரம்பை-வாழை. ஈகை-கொடுத்தல். தொடி, தொடுக்கப்படுவது தொடி; அஃதிங்கு வளையல். அஃது அன்மொழித்தொகையாய் வளையலையணிந்த பெண்ணையுணர்த்தி நின்றது. 18. வியனுலகம்-பரந்த உலகம். தழற்கதிர்-கதிரவன்ஒளி. தண்ணென்கதிர்-நிலவுக்கதிர். இரு-பெரிய. உலகம்-இங்கே உலகத்திலுள்ளவர்களை. கதிர்-நிலா. 19. அல்லோர்-தீயோர். அழுங்குவார்-வருந்துவார்கள். சுழல்கால்-சூறைக்காற்று. உறீஇ-அடைந்து; சொல்லிசையளபெடை. 20. இழுது-வெண்ணெய். மண்டு-நெருங்கிய. கலுழும்-வருந்தும். 21. எழுத்து-இலக்கணம். சுரநீர்மிகை-விண்ணகக் கங்கையின் பெருக்கு. வீயும்-ஒழியும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்