முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
8. நன்னெறி
முனிவினு நல்குவர் மூதறிஞ ருள்ளக்
கனிவினு நல்கார் கயவர்-நனிவிளைவில்
காயினு மாகுங் கதலிதா னெட்டிபழுத்
தாயினு மாமோ வறை.
(28)
உடற்கு வருமிடர்நெஞ் சோங்குபரத் துற்றோர்
அடுக்கு மொருகோடி யாக-நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பனிமொழியா யஞ்சுமோ
மண்ணிற் புலியைமதி மான்.
(29)
கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே-வெள்ளம்
வருவதற்கு முன்ன ரணைகோலி வையார்
பெருகுதற்க ணென்செய்வார் பேசு.
(30)
பேரறிஞர் தாக்கும் பிறர்துயரந் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார்-நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோ லடிதன்மேற்
கைசென்று தாங்குங் கடிது.
(31)
பன்னும் பனுவற் பயன்றே ரறிவிலார்
மன்னு மறங்கள் வலியிலவே-நன்னுதால்
காழொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ
தாழொன் றிலதாயிற் றான்.
(32)
எள்ளா திருப்ப விழிஞர்போற் றற்குரியர்
விள்ளா வறிஞரது வேண்டாரே-தள்ளாக்
கரைகாப் புளதுநீர் கட்டுகுள மன்றிக்
கரைகாப் புளதோ கடல்.
(33)

28. முனிவு-சினம். மூதறிஞர்-பேரறிஞர்கள். கதலி-வாழை. பழுத்தாயினும்-பழுத்தாலும். 29. பரத்துற்றோர்-பரம்பொருளை நாடியிருப்பவர்கள். பனிமொழி-குளிர்ந்தமொழி. மதிமான்-திங்களில் உள்ளமான். 30. கொள்ளும்-உயிரைக் கொள்ளும். குறுகுதல்-அடைதல். பெருகுதற்கண்-வெள்ளம் வந்த பொழுது. 31. தாக்கும்-துன்புறுத்தும். வீரம்-ஆண்மை. கோலடி-பிரம்பாலடிக்கும் அடி. கடிது-விரைவாக. 32. பனுவல் பயன்-நூற்பயன். பன்னும்-கூறும். தேர்-தெளியும். காழ்-வலிமை. 33. எள்ளாது-இகழாது. விள்ளா-பழிச்சொல்லுக் காளாகாத.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்