முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
8. நன்னெறி
அறிவுடையா ரன்றி யதுபெறார் தம்பாற்
செறிபழியை யஞ்சார் சிறிதும்-பிறைநுதால்
வண்ணஞ்செய் வாள்விழியே யன்றி மறைகுருட்டுக்
கண்ணஞ்சு மோவிருளைக் கண்டு.
(34)
கற்ற வறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தா மென்று மதியாரே-வெற்றிநெடு
வேல்வேண்டும் வாள்விழியாய் வேண்டா புளிங்காடி
பால்வேண்டும் வாழைப் பழம்.
(35)
தக்கார்க்கே யீவர் தகார்க்களிப்பா ரில்லென்று
மிக்கார்க் குதவார் விழுமியோர்-எக்காலும்
நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக் கிறைப்பரோ போய்.
(36)
பெரியார்முற் றன்னைப் புனை ந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழுந்-தெரியாய்கொல்
பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய் விந்தமலை
தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.
(37)
நல்லார் செயுங்கேண்மை நாடோறு நன்றாகும்
அல்லார் செயுங்கேண்மை யாகாதே-நல்லாய்கேள்
காய்முற்றிற் றின்றீங் கனியா மிளந்தளிர்நாள்
போய்முற்றி னென்னாகிப் போம்.
(38)
கற்றறியார் செய்யுங் கடுநட்புந் தாங்கூடி
உற்றுழியுந் தீமைநிகழ் வுள்ளதே பொற்றொடீ
சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.
(39)

34. அதுபெறார்-அறிவிலார். செறி-பொருந்திய. பிறை நுதால்-பிறைபோலும் நெற்றியை உடையவளே. இவ்வாறு பெண்களை விளித்துக் கூறுதலை மகடூஉமுன்னிலை என்பர். இத்தகைய மகடூஉமுன்னிலைகள் தமிழ் நூல்களில் பல விடங்களினும் வருவதைக் காணலாம். இவ்வாறு ஆடூஉமுன்னிலையுமுண்டு. 35. காமுறுவர்-விரும்புவர். வேல் வேண்டும்-வேல் விரும்பும். 36. விழுமியோர்-மேலோர். மிக்கார்-தீமையில் மிக்கவர்கள். முளிபுல்-காய்ந்தபுல். 37. புனைந்துரைத்த-புகழ்ந்து பேசிய. உயர்வு தரியாது அகன்று-பெருமை நிலைபெறாமல் நீங்கி. தாழும்-இழிவடைவான். பொன்னுயர்வு-திருமகளின் பெருமையை. 38. கேண்மை-நட்பு. அல்லார்-தீயோர். 39. தாம் கூடியுற்றுழியும்-கூடியிருக்கும் வரையிலும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்