9. திருவெங்கைக்கோவை |
|
|
[ தமிழில் வழங்குந் தொண்ணூற்றாறுவகை நூல்களில் கோவை யென்பதும் ஒன்று. இக்கோவை அகப்பொருளின் மீது வைத்துப் பாடப்பெறும். அகப்பொருள் என்பது அகத்தினாலாகிய பயன். அஃது ஒருவனும் ஒருத்தியும் அன்பினாற் கூடுங் கூட்டத்தைப் பொருளாகக் கொண்டது. அக்கூட்டத்தின்பின் இன்னவா றிருந்தது என்று வாயாற் கூறமுடியாது உள்ளத் துணர்வானே நுகரப்பெறுதலின் இஃது அகப்பொருள் என்று பெயர் பெற்றது. அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாக விளங்கும் கோவை நூல் நம்தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு நூலாகும். ஓரின மணிகளை ஒழுங்குபெறக் கோத்தல் போல அகப்பொருட்கிளவிகளை ஒழுங்குபெறக் கோத்தலின் இது கோவை யென்று பெயர் பெற்றது. இக்கோவை களவு கற்பு என்னும் இரண்டியல்களில் இருபத்தாறு கிளவிக் கொத்துகளால் நானூறு துறைகளைக் கொண்டு முடிகிறது. 426 பாடல்களைக் கொண்டது. எல்லோரும் இந்நூலைப்பயின்று இன்புறுவார்களாக!] |
|
|
|
காப்பு கட்டளைக் கலித்துறை |
|
|
பூவை மலர்நிறத் தெம்பெரு மாட்டி பொருப்பரையன் பாவை வளர்க்குங் கிளிமுன்கை யாளொரு பான்மருவுந் தேவை வளர்சடைத் தென்வெங்கை வாணனைச் சேர்ந்துவருங் கோவை படர்வதற் குள்ளூன்று வாமொற்றைக் கொம்பரையே.
|
|
|
நூல் களவியல் கைக்கிளை காட்சி |
|
|
பூவும் பழுத்த செழுந்தீங் கனியும் பொழியமுதம் மேவுங் குடங்க ளிரண்டுட னேயிரு மீனுங்கொண்டு சேவுந் தழகர் திருவெங்கை வாணர் சிலம்பின்மலர் தூவும் பொழிலி லெதிர்ப்பட்ட தாலொரு தூமணியே.
|
(1) |
|
ஐயம் |
|
|
மண்ணோ விரைச்சந் தனவரை யோமலர் மாளிகையோ விண்ணோ வலைத்தண் புனலோ பழமலை வெங்கையன்ன பெண்ணோ டிருக்கும் பொழுதிளஞ் சேலிற் பிறழுநெடுங் கண்ணோ டிருக்கு முகம்போல்வ தாங்கது கண்டிலமே.
|
(2) |
|
|
|
பூவைமலர்-காயாம்பூ. பொருப்பரையன் பாவை-உமாதேவி. கோவை-கோவையென்னும் நூலையும், கோவைக் கொடியையும்; கொம்பர்-கொம்பையுடைய யானைமுகக் கடவுளையும், அர் இறுதி பெற்ற கொம்பையு முணர்த்தலின் சிலேடை.1. குடங்கள்-கொங்கைகள். இருமீன்-கண்கள். சேஉந்து-காளையைச் செலுத்துகிற. தூமணி-மாணிக்கம்; ஈண்டு மாணிக்கத்தைப்போன்ற தலைவி. முகமாகிய தாமரை முதலியன கொண்டு எதிர்ப்பட்டதென்க. 2. விரை சந்தன வரை-மணமுள்ள பொதியமலை. மலர்மாளிகை-தாமரை மலராகிய வீடு. பிறழும்-புரளும். பெண்ணோடிருக்கும்பொழுது கண்ணோடிருக்கும் முகம் போல்வதாகிய இடம், மண்ணாதியவற்றுள் எதுவோ அது கண்டிலம் என்பது. அவனிமங்கை வரையரமங்கை திருமங்கை தேவமங்கை நீரரமங்கையென்பவருள் எம்மங்கையோவென்பான் அவரவரிடஞ்சுட்டி ஐயுற்றவாறு, பிந்தியதும் இது.
|
|
|
|