முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
இயற்கைப்புணர்ச்சி
இரந்துபின்னிற்றற்கெண்ணல்
புரந்தாடு மையர் திருவெங்கை வாணர் பொருப்பினின்ற
அரந்தா ழயிற்கண் மடமா திரத்தக்க ராதலினால்
இரந்தாய் குவமிவர் தந்தன நாமின் றினியநெஞ்சே
கரந்தா னமக்குப் பழியுள தாயிற் கழறுகவே.
(6)
இரந்துபின்னிலைநிற்றல்
தாளுந் தரக்கன் றனைமீண் டெடுத்துய்யத் தண்ணளியால்
ஆளும் பழமலை வெங்கையன் னீரொன் றலாதுபல
வாளுங் கணையுங் கதிர்வேலு மானு மதர்விழியால்
நீளுந் துயர்செய்து வாளாநின் றீரிது நீதியன்றே.
(7)
முன்னிலையாக்கல்
பாரக்கைச் சூலத்தர் வெங்கையி லேகண் பகைத்துநின்ற
வாரக்கட் பூஞ்சுனைப் போதையெல் லாமட லோடுமடல்
சேரக்கட் டிக்குழற காட்டிலி டாமற் சிறந்தவலங்
காரக்கட் பேதை தனித்துநின் றாயென்ன காரணமே.
(8)
மெய்தொட்டுப்பயிறல்
மெய்கூ றிடும்வரை மங்கைம ணாளர்தம் வெங்கையினிற்
பொய்கூற றிலஞ்சிலர் போலிலை யேயெனப் புல்லிழையிற்
செய்கூ றதிலொன் றளவுள தேயிவள் சிற்றிடைதான்
மைகூர் குழலில் வெறிகொண் டுலாவு மதுகரமே.
(9)

6. புரந்து-யாவரையும் காப்பாற்றி. அரந்தாழ்-அரத்தினால் அராவப்பட்ட. கரந்தால்-இல்லையென்று மறைத்தால்“இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி யன்று”என்னுந் திருக்குறளின் கருத்தது. 7. அரக்கன்-இராவணன். உய்ய-பிழைக்க. அன்னீர்-நிகர்த்தவரே. எனக்குத் துன்பஞ்செய்த நீர் அருள்புரியாமல் நிற்பது தக்கதன்று என்பது கருத்து. 8. கைபாரம் சூலத்தர்-கையிற்பாரம் பொருந்திய சூலப்படையை உடையவர். சுனைப்போது-சுனையிலுள்ள மலர்கள். குழல் காடு-கூந்தற்காடு. வார் கள் என்பதை கள் வார் என மாற்றுக. கள் வார்-தேனொழுகுகின்ற. கண்ணுக்குப் பகையாவது மலர். அது கண்ணை யொத்திருத்தலால் “கண் பகைத்து நின்ற வாரக்கட் பூ” என்றார் என்க. 9. புல்இழை-நுண்ணியநூல் இழை. மைகூர் குழல்-கருமை மிகுந்த கூந்தல். மை-கருமை. மதுகரம்-வண்டுகள். செய்-இங்கே வகிர்ந்த.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்