| 9. திருவெங்கைக்கோவை |
|
| இதுவுமது |
| |
| |
மன்னிசை வெங்கை யுடையபி ரான்வரை மானுசுப்பைப் பொன்னிசை கொங்கை யொடித்தாலு நிந்தை பொருந்துநுமை மின்னிசை மென்குழ லேறன்மின் னீவிர் விளங்கிலிரோ இன்னிசை வண்டினங் காள்காக தாலிய மென்பதுவே.
|
(10) |
| |
| பொய்பாராட்டல் |
| |
| |
முழுதலங் கார மழுவோன் றிருவெங்கை மொய்குழலுன் பழுதறுங் கொங்கைக் குடைதுய ராற்பனி மாமலயம் அழுதகண் ணீரைப் பொருநையென் பாரதன் வெய்துயிர்ப்பை எழுதருந் தென்ற லெனவே யுலக ரியம்புவரே.
|
(11) |
| |
| இதுவுமது |
| |
| |
உன்மலை வார்முலை நல்லேர் கவர்ந்த துதவுதற்குப் பொன்மலை நாணொண் கழுத்தொடு தாளுறப் பூட்டிவெங்கை மன்மலை மாதுமை பங்காளன் முன்னம் வளைத்ததன்றி வின்மலை யாக்குத லென்மிளிர் வேற்கண் விளங்கிழையே.
|
(12) |
| |
| இடம்பெற்றுத்தழால் |
| |
| |
வந்தாளு மையர் திருவெங்கை வாணர் வரையணங்கே நந்தா மணிவிளக் குற்றுதிர் பூவணை நன்கமைந்த பைந்தா துகுக்குங் கணியேறு மல்லிகைப் பந்தரிடஞ் சிந்தா குலமற நாமிசை யோர்மணஞ் செய்வதற்கே.
|
(13) |
| |
|
| |
10. மன்-நிலைபெற்ற. மான் போன்ற சாயலுடைய தலைவி. பொன் இசை கொங்கை-பொன் போலத் தேமல் பரவியதனம்; பொன்னணிகள் பொருந்து மெனினுமாம். நுசுப்பு-இடை. மென்குழல்-மெல்லிய கூந்தல். மின் இசை-மின்னுதலைப் பொருந்திய. காகதாலியம்: ஒரு நியாயம்; இது காக்கையேறப் பனம்பழம் விழுந்ததென்பது. இதனை அறிந்திலிரோ என்றபடி. 11. முழுதலங்காரம்-மிகுந்த அழகு. உடைதுயர்-தோற்றுப் போன துன்பம். வெய்துயிர்ப்பு-பெருமூச்சு. பொருநை-தாமிரபரணி நதி. 12. மலை-மலையைப் போன்ற. வார்முலை-கச்சணிந்த தனம். ஏர் கவர்ந்தது-அழகைக் கைப்பற்றிக் கொண்டது. உதவுதற்கே பொன்மலையை வளைத்தது; அல்லாமல் மலையை வில்லாக்குதல் யாண்டையதென்பது. 13. இசையோர்மணம்-காந்தருவமணம். பைந்தாது-பசிய மகரந்தப்பொடி. கணி-வேங்கை. காந்தருவ மணம் புரிதற்கு இடம் உற்று அமைந்தது என்பது.
|
|
|
|