முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
இடையூறு கிளத்தல்
மதயானை யீருரி யூடே மறைந்து மழைமறைத்த
உதயா திபனென நின்றார்தம் வெங்கையி லுன்றனைப்போற்
கதையா லெனினு மறிந்திலம் வேள்கல கத்தணங்கே
புதையாது பைம்பொற் குடங்கதிர் வாளைப் புதைப்பதுவே.
(15)
நீடுநினைந்திரங்கல்
சூலக் கரத்தர் திருவெங்கை வாணர்முன் சுட்டமதன்
நீலக் கணையிற்கை வைத்தா னினிச்சற்று நேரநிற்பிற்
காலற் கிரையிடு மென்னா வியையிந்தக் காரிகையார்
கோலக் களபக்குன் றென்றோ மருவக் குறுகுவதே.
(16)
மறுத்தெதிர்கோடல்
சந்தாப வெந்தழ றன்னடி யார்க்குத் தணித்தருளுஞ்
செந்தா மரைமலர்த் தாளர்தம் வெங்கைச் செழுஞ்சிலம்பில்
நந்தா மதுகை யொடுபிறப் பேழு நமைத்தொடர்ந்து
வந்தார் தமையிந் நிறையோ வராமன் மறிப்பதுவே.
(17)
வறிதுநகைதோற்றல்
புல்லார் பவர்கணெற் சோறுபெற் றாங்குப் பொருந்தியென்றும்
அல்லார் மதிய நிலவுண் சகோர மருந்தவுங்கல்
வில்லார் திருவெங்கை யன்பர் முகாம்புயம் வீறுதவும்
நல்லார் வதன மதியிடந் தோன்று நகைநிலவே.
(18)

15. மத யானை ஈருரி-கயா சுரனது தோல். வேள் கலகம்-காமப்போர். பைம்பொற்குடம்-கொங்கை. உதயாதிபன்-இளங்கதிரவன். உன்றனைப் போலப் புதைப்பது கதையாலும் அறிந்திலம் என்க. இத்துறை நாணிக் கண்புதைத்தலெனவும்படும். 16. நீலக்கணை-நீலமலராகிய அம்பு. களபக்குன்று-சந்தனமலை (கொங்கை.) இம்மலையரண் கிடைக்கின் மதனை வெல்லலாம் என்பது. 17. சந்தாபம்-பிறவிவெப்பம். நந்தா-கெடாத. மதுகை-வலி. நிறை-கற்பு. 18. புல்லார்பவர்-புல்ைலையுண்பவர்கள். அல் ஆர்-இரவிற் பொருந்தும். வீறு உதவும்-பெருமகிழ்ச்சியைக் கொடுக்கும். அருந்தவம் குறைவின்றித் தோன்றும் என்பது. முகாம்புயத்துக்கு என உருபு விரிக்க.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்