| 9. திருவெங்கைக்கோவை |
|
| முறுவற்குறிப்புணர்தல் |
| |
| |
தனிவா னவர்நந் திருவெங்கை வாணர் தழலெறிப்ப முனிவா னகைசெய் நகைபோல்வ தன்றிம் முகிண்முலையார் பனிவாண் மதிமுகத் தேயெனை யாளப் பரிவின்மனக் கனிவா லெழுநகை யீதம்பி காமக் கடலினுக்கே.
|
(19) |
| |
| முயங்குதலுறுத்தல் |
| |
| |
கொங்கைக் குவடு மணியல்குற் பாம்புங் குறுமுனிவன் அங்கைத் தலமடங் காவிழி வாரியு மாங்கிருப்ப வெங்கைப் பழமலை யாரரு ளாலவ் விசும்பறியா மங்கைப் பருவத் திவள்வா யமுதிங்கு வாய்த்ததுவே.
|
(20) |
| |
| புணர்ச்சியின் மகிழ்தல் |
| |
| |
தாண்டுஞ் சினவிடை யெம்மான் றனிவெங்கைத் தண்சிலம்பில் யாண்டும் பெறலரு மின்பமெல் லாமைம் புலனுமின்று தூண்டுஞ் சுடரென நின்றவிம் மாதரிற் றுய்த்தனவால் வேண்டும் பொருணமக் கேதோ வினியிந்த மேதினிக்கே.
|
(21) |
| |
| புகழ்தல் |
| |
| |
புறந்தாழ் குழலுமை பங்காளர் வெங்கை புரத்தர்வெற்பிற் குறைந்தா லிவணுத லொவ்வாய் நினது குறைநிறைந்தாற் சிறந்தா யிழைமுக மொவ்வாய் விளங்குஞ் செழுங்கலையால் நிறைந்தாலென் னன்றிக் குறைந்தாலென் னெங்கட்கு நீமதியே.
|
(22) |
| |
வன்புறை அணிந்துழிநாணியதுணர்ந்து தெளிவித்தல் |
| |
| |
மன்றா டியதிரு வெங்கைபு ரேசர் மணிவரைமேல் நன்றா யணிகுவ னென்றாலு நின்பெரு நாணையஞ்சிக் குன்றா ரெதிரொலி போலநின் பாங்கியர் கோலணியா இன்றா யிழையணிந் தேன்வெரு வேனெஞ் சிளங்கொடியே.
|
(23) |
| |
|
| |
19. தழல் எறிப்ப-அனல்வீச. முனிவால் நகைசெய்-சினத்தினால் நகைத்தலைச் செய்கின்ற. அம்பி-தெப்பம்; புணை. தனி-தனக்கு ஒப்பில்லாத. பனி-குளிர்ச்சி. பரிவு-இரக்கம். வாள்-ஒளி. மதி-இங்கே திங்கள். இவள் புன்முறுவல் காமக்கடலைக் கடப்பதற்குப் புணையாயிற்றாம். அம்முறுவல் பரிவொடு தோன்றுதலின் அவ்வாறாயிற்றென்க. 20. கொங்கைக்குவடு-கொங்கையாகியமலை. விழிவாரி-விழியாகிய கடல். குவடு-உச்சி; அங்கை என்பதை அகம் கை எனப்பிரிக்க. அங்கை என்பது உள்ளங்கை. ஆங்கிருப்ப-தொழிற்படாமல் வறிதே யிருக்கவும். 21. தாண்டும் சினவிடை-தாண்டிச் செல்லுதலையுடைய சினம் பொருந்திய காளை. “கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள.”என்பவாகலின் இவ்வாறு கூறினான். ஐந்திந்திரியங்களும் இன்பமெல்லாந் துய்த்தன என்க. 22. தாழ்-தொங்குகின்ற. திங்கள் கலை குறைந்தாலும் அன்றி வளர்ந்தாலும் இவள் முகத்துக் கொவ்வாது என்பதாம். இதனால் இவளது நலம் பாராட்டலாயிற்று. சிறந்த ஆயிழை-சிறந்தாயிழையென நிலைமொழி யீற்றகரந் தொகுத்தலாயிற்று. “புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை” என்ற விடத்துப் போல. 23. மன்று-பொன்னம்பலம். நாணை-வெட்கத்தை. கோல்-செய்கின்ற. வெருவேல்-அஞ்சாதே. வரை-இங்கே மலை; இது மூங்கில் வளரப் பெறுதலால் இப்பெயர் பெற்றது.
|
|
|
|