முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
இடமணித்தென்றல்
சீறாக் கயல்விழி மாதேதென் வெங்கைச் செழும்பதியான்
கூறாய்த் திகழ்திரு மேனியு மாதுமை கூறுடலும்
வேறாய்ப் புணர்வதென் னோவந்துன் சாரல் வியன்பதியும்
மாறாப் பழனத் தெமதூரு மொன்றி மருவுறுமே.
(28)
தெளிவு
பழிமாற் றியபுகழ் வெங்கைபு ரேசர் பனிவரைமேல்
மொழிமாற் றெனும்பொருள் கோளினல் லாமன் மொழிபிறழார்
சுழிமாற் றியவுந்தி யாய்வரு வேனெனச் சொல்லியவவ்
வழிமாற்ற மும்பிறழ் மோபிற ழாது மறப்பினுமே.
(29)
பிரிவுழிமகிழ்ச்சி
செல்லுங்கிழத்தி செலவுகண்டுளத்தொடு சொல்லல்
உடையோர் சிறிதொரு கைதூக்கி வீசி யொருகையினைப்
புடையோ டரிக்க ணிலனோக்கிச் சிற்றொலிப் பூணுடனே
சடையோர் திருவெங்கை வெற்பினம் மாவி தனிநெஞ்சமே
நடையோ திமங்கள்கண் டென்னே பறக்க நடக்கின்றதே.
(30)
பாகனொடுசொல்லல்
பொன்னங் கிரிநிகர் திண்டேர் செலுத்தும் புகழ்வலவா
மின்னஞ் சடையர் திருவெங்கை வாணர்தம் வெள்ளருவித்
தென்னஞ் சிலம்பி லிடைமிடித் தார்தமைத் தேடியெதிர்
அன்னம் பிடியென வேநடந் தேகுநம் மாயிழையே.
(31)
பிரிவுழிக்கலங்கல்
ஆயவெள்ளம்வழிபடக்கண்டிது மாயமோவென்றல்
ஆயவெள் ளத்தி னடுவே யிருக்கு மரசவன்னம்
பாயவெள் ளத்தமு துற்றாங் கெனக்ககப் பட்டதுதான்
மேயவெள் ளச்சடை யம்மான் றிருவெங்கை வெற்பிலொரு
மாயவெள் ளக்கன வோவறி யேனெஞ்ச மாழ்குவதே.
(32)

28. சீறா-சினவாத. கூறு-பாகம். பழனம்-வயல்; அது சார்ந்த இடமும் கொள்க. 29. பழிமாற்றிய-பழியை நீக்கிய. சுழி-நீர்ச்சுழி. உந்தி-கொப்பூழ். வழிமாற்றம்-தாழ்ந்தசொல். பிறழ்மோ-தவறுமோ? பிறழாது-தவறாது. மொழிமாற்றுப் பொருள்கோள்-எண்வகைப் பொருள் கோளில் ஒன்று ; அது அவ்விடங்கட்கியைய மொழிகளை மாற்றிப் பொருள் கொள்வது. வழி-முறைமை. 30. உடை-ஆடை. அரி-செவ்வரி. பூண்-அணிகலம். சடையோர்-சடையை உடையவர். ஆவி-உயிரைப் போன்ற தலைமகள். ஓதிமங்கள்-அன்னங்கள். புடை-பக்கம். வெற்பு-மிக உயர்ந்த மலை. 31. வலவன்-தேர்ப்பாகன். இடைமிடித்தார்-இடை வறுமைப்பட்டவர் :அஃதாவது இடை சிறுத்தவர்கள். அன்னம் பிடி-அன்னமும் பெண் யானையும்; உணவு ஒருபிடி. இடைமிடித்தார் அன்னம்பிடி-என்பன சிலேடை. 32. ஆயவெள்ளம்-தோழியர் கூட்டம். வள்ளம்-கிண்ணம். பாயவெள்ளம்-பயவெள்ளம்; ஈண்டுப் பாற்கடல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்