முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
வாயில்பெற்றுய்தல்
சேவை யுகைப்பவர் வெங்கைபு ரேசர் சிலம்பின்மயல்
நோவை யொழிப்ப மருந்துகண் டோமினி நோவனெஞ்சே
பூவை யுருத்த மொழியார் மழைக்கட் பொறிவண்டுதாம்
பாவை யொருத்தி முகாம்புயத் தேசென்று பாய்கின்றவே.
(33)
பண்புபாராட்டல்
நிதிமுன் மிடியர் மனம்போ லவாவி நிகரில்வெங்கைப்
பதிமுன் புகுமுது குன்றுடை யார்பதம் பண்டரைத்த
மதிமுன் மரையு மரைநா யகன்முன் மதியுங்கண்டோர்
விதிமுன் கொணரு மிவர்முகம் போல வியக்கிலரே.
(34)
பயந்தோர்ப்பழிச்சல்
செந்தா மரையு மரிமார்பு மென்னத் திருமகடான்
நந்தா மனையிடை யின்றிருந் தாங்கெந்த நாளுமுற
அந்தாழ் சடையவர் வெங்கையி லேநம தாவிநிற்ப
வந்தா ரமுதிகழ் தந்தாரைத் தந்தவர் வாழியவே.
(35)
கண்படைபெறாதுகங்குனோதல்
அரவாம் பணியினர் வெங்கைபு ரேச ரணியழகின்
வரவாங் கதிரென் றுறுமோ வுடுமொக்குள் வந்தெழவே
விரவாம் புயற்கர வோடவிர் மாமதி வெள்வளைசேர்
இரவாங் கடலில் விழுந்தமிழ் வேனை யெடுப்பதற்கே.
(36)

33. சே-காளை. நோவல்-வருந்தாதே. பூவை-நாகணவாய்ப் புள். உருத்த-வென்ற. சிலம்பு-மலை. இது எதிரொலித்தலால் இப்பெயர் பெற்றது. முகாம்புயம்-முகம் அம்புயம்; முகமாகிய தாமரை. பொறி-அறிவு. 34. நிதி-செல்வம். மிடி-வறுமை. மதி-ஈண்டு முழுத் திங்கள். மரை-முதற்குறை. தாமரையை மலர்த்துதலால் கதிரவனை மரை நாயகன் என்றார். தாமரையும் மதியும் ஒளியிழத்தலைக் கண்டவர் உவமியார் : காணாதவரே முகத்துக்கு உவமிப்பரென்பது. 35. அரிமார்பு-திருமாலின் மார்பு. நந்தாமனை-அழிவற்ற இல்லத்தில். எந்நாளும் பொருந்த வாழிய என்று கூட்டுக. 36. அரவாம் பணியினர்-பாம்பாகிய அணிகலன்களையுடையவர். உடு-விண்மீன். மொக்குள்-குமிழிகள். புயல் கரவோடு-முகிலாகிய முதலையோடு. வெள்வளை-வெள்ளிய சங்கம். வரவாங்கதிர்-வருதலையுடைய கதிரவன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்