முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
கிழவோன்வேட்கைதாங்கற்கருமைசாற்றல்
பாலார் மொழியுமை பங்காளர் வெங்கையம் பாவைதந்த
மாலாழ் தருமெனை வெவ்வுரை யானண்ப வாட்டுகின்றாய்
காலாழ் களரி னமிழ்ந்தவெங் கோட்டுக் களிற்றையொரு
வேலா லெறிபவர் போலே யிதுவென் விதிவசமே.
(48)
பாங்கன்றன்மனத்தழுங்கல்
பெட்டுப்பட் டாவுரி கொண்டோன்றென் வெங்கைப் பிரான்வரையின்
மட்டுப்பட் டாவி மலர்வா ரிசமுக வல்லிமுகை
ஒட்டுப்பட் டானை யனையா னிடையெனு மோரிழையாற்
கட்டுப்பட் டானினி யென்செய்கு வேனிந்தக் காசினிக்கே.
(49)
தலைவனோடழுங்கல்
நாட்டு மலிபுகழ்ப் பெம்மான் றிருவெங்கை நாட்டிறைவ
கோட்டு வரிவிற் கொலைவேடர் தந்த கொடியிடையாள்
பூட்டு மயற்றொடர் நீயே படினெவர் போக்குறுவார்
காட்டு மிரவிக் கிரவியுண் டோவிருள் காய்வதற்கே.
(50)
எவ்விடத்தெவ்வியற்றென்றல்
தழைந்தார் மலிசடை யீசர்தம் மாதின் றடமுலைக்குக்
குழைந்தார் திருவெங்கை நாயக னாரிடங் கொண்டுதனி
விழைந்தார் நினதகத் திற்றிட்டி வாயிடை வேழமொடு
நுழைந்தா ரிடமிய லெல்லா மிறைவ நுவன்றருளே.
(51)

48. பாவை-பாவை போல்வாளாகிய தலைமகள். மால்ஆழ் தரும்-மயக்கத்தில் ஆழுகின்ற. வெவ்வுரை-கடுஞ்சொல். கோடு-கொம்பு. களிறு-ஆண்யானை. 49. பெட்டு-விரும்பி. பட்டுஆ-பட்டாடையாக. உரி-யானைத் தோலை. மட்டுப்பட்டு-தேன்பொருந்தி. முட்டுப்பட்டு-தடைப்பட்டு. ஆனை அனையான்-யானையைப் போன்றவன். 50. கோட்டு-வளைக்கப்பட்ட. பூட்டு-பூட்டிவிட்ட. மயல்தொடர்-மையல் விலங்கில். இரவிக்கு இரவி-கதிரவனுக்கு வேறொரு கதிரவன். 51. தழைந்த-செழித்த. மாது-உமாதேவி. குழைந்தார்-நெகிழ்ந்தார். திட்டிவாய்-கண்ணாகிய வழி. நுவலல்-சொல்லல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்