| 9. திருவெங்கைக்கோவை |
|
| அவனஃதிவ்விடத்திவ்வியற்றென்றல் |
| |
| |
நறையே யிதழி புனைவார் திருவெங்கை நாதர்சடைப் பிறையே நுதலவர் மானே கருங்கண் பிடித்ததுடிப் பறையே யிடையணி பாம்பே யகலல்குல் பற்றுமலை இறையே முலைமலர்த் தண்டலை யேயிட மென்னுயிர்க்கே.
|
(52) |
| |
| பாங்கனிறைவனைத்தேற்றல் |
| |
| |
தடங்கொண்ட கண்ணி யிடத்தார் திருவெங்கைத் தண்டலையை இடங்கொண்டு காமப் புனனீந்தி நீகரை யேறுதற்குக் குடங்கொண்டு நின்ற வொருமாதைக் கண்டு குறுகுமட்டுந் திடங்கொண்டு நெஞ்சந் தளராது நிற்றி திறலவனே.
|
(53) |
| |
| குறிவழிச்சேறல் |
| |
| |
காவியு மாம்பலும் பூத்தசெந் தாமரை கண்டளிகள் வாவியு மோடையும் விட்டெய்த வேபொழில் வாய்நிற்குமோ தேவியு மானும் விளையா டிடத்தர் திருவெங்கையில் ஆவியு மாரமு தும்போன் றிறைகண்ட வாயிழையே.
|
(54) |
| |
| இறைவியைக்காண்டல் |
| |
| |
முகையே முலைசெழும் போதே முகமலர் மூசுவண்டின் தொகையே குழல்செந் தளிரே யடிநற் சுவைக்கனியே நகையே யிதழ்திரு வெங்கைபு ரேசர்கைந் நவ்விமிகும் பகையே யெனுங்க ணிவரே யிறைசொன்ன பைங்கொடியே.
|
(55) |
| |
| இகழ்ந்ததற்கிரங்கல் |
| |
| |
புடையே யுமையொடுஞ் செங்கதிர் வேற்கைப் புதல்வனொடும் விடையே யிவர்தரும் பெம்மான் றிருவெங்கை வெற்பிலன்னப் பெடையே யெனவந் திளங்கா வுறுமிப் பெருந்தனத்தார் இடையே யிலையெனி னைந்திளை யான்கொ லிறையவனே.
|
(56) |
| |
|
| |
52. நறைஏய்-தேன் பொருந்திய. இதழி-கொன்றை. புனைவார்-அணிவார். துடிப்பறை-உடுக்கை. மலைஇறை-மேருமலை. தண்டலை-குளிர்ச்சியாகிய இடம். 53. திறலவன்-ஆற்றல்மிக்கவன். தடம்கொண்ட-அகற்சியைக் கொண்ட. குடம்-கும்பம்; அஃது ஈண்டுக் கொங்கையை உணர்த்திற்று. 54. காவி-கருங்குவளை. ஆம்பல்-செவ்வல்லி. அளிகள்-வண்டுகள். ஆம்பல் என்றது வாயை. இறை-பண்பாகு பெயர். 55. குழல்-கூந்தல். முகை-மொட்டு. நவ்வி-மான். கணிவர்-கண்இவர்-கண்களையுடைய இவர். 56. புடை-பக்கம். விடை-காளை. பெருந்தனத்தார்-பெரிய கொங்கைகளையுடையவர் ; பெருஞ்செல்வர்.
|
|
|
|