முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
ஒழுக்கத்தாலையந்தீர்தல்
கொற்றிக் கிசைந்த புயத்தார் திருவெங்கைக் கோமளமே
நெற்றிக் குடைந்ததென் றெள்ளப் படாதந்த நெற்றியின்மேல்
வெற்றிக் கமலக் கரங்குவித் தேயின்று விண்ணினெழும்
மற்றிப் பிறைத்தெய்வங் கன்னியர் யாரும் வணங்குவதே.
(67)
சுனைநயப்புரைத்தல்
கடைக்கண் சிவந்தித ழொன்றே வெளுப்பக் கலவையினுள்
இடைக்கண் மெலிவு தருங்கொங்கை மேலது வேயழிய
விடைக்கண் விரும்பு யுறைவார் திருவெங்கை வெற்பிடத்திற்
றொடைக்கண் மலர்க்குழ லாய்சுனை யாதினுட் டோய்ந்தனையே.
(68)
சுனைவியந்துரைத்தல்
ஒளியார் குமுதநல் வெள்ளாம்ப லாக வொழிவருதண்
அளியார் கருநெய்தல் வந்துசெந் தாமரை யாகச் செய்யில்
எளியா ரடியவர்க் கானார்தம் வெங்கையில் யாரொருவர்
குளியார் மதிநுத னீயா டியவக் குளிர்சுனையே.
(69)
தகையணங்குறுத்தல்
பண்ணூடு மின்சொ லுமைபாகர் வெங்கைப் பனிவரைமேல்
விண்ணூ டிழிந்து வருந்தெய்வ மாது விளங்குறுமென்
கண்ணூ டிருந்தபெண் ணின்னீழ லாகக் கருத்திடைநீ
எண்ணூ டிருந்துக வேலிவ டானெங்க ளேந்திழையே.
(70)

67. கொற்றிக்கிசைந்த-துர்க்கைக்கேற்ற. உடைதல்-தோற்றல். எள்ளல்-இகழ்தல். 68. கடைக்கண்-கட்கடை. இதழ் ஒன்றே என்றது அதரத்தை. கலவி-புணர்ச்சி. 69. மதிநுதல்-பிறைபோலும் நெற்றியை உடையவள். ஒழிவு அறு-இடையறாத. 70. பண்-இந்தளம். பஞ்சுரம், பழம் பஞ்சுரம், குறிஞ்சி, கைசிகை, கேதாரம் முதலியன. ஊடுதல்-பிணங்குதல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்