1. சோணசைலமாலை |
|
|
துவக்கற வறிந்து பிறக்குமா ரூருந் துயர்ந்திடா தடைந்துகாண் மன்றும் உவப்புட னிலைத்து மரிக்குமோர் பதியு மொக்குமோ நினைக்குநின் னகரைப் பவக்கடல் கடந்து முத்தியங் கரையிற் படர்பவர் திகைப்பற நோக்கித் தவக்கல நடத்த வுயர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(2) |
|
|
நீங்கருந் துயர்செய் வளிமுதன் மூன்ற னிலையுளே னவைதுரந் திடுமுன் வாங்கிநின் றனிவீட் டுறைகுவான் விரும்பி வந்தன னின்குறிப் பறியேன் ஆங்குறை மதியே தாங்கியென் றுலக மறைகுறை யறநிறை மதியுந் தாங்கிய முடியோ டோங்கிய சோண சைலனே கைலைநா யகனே.
|
(3) |
|
|
கனிமலை துவர்வாய்க் கோதையர்க் குருகுங் கன்மனக் கொடியனுக் கென்னீ துனிமலை பிறவி தவிர்த்தனை யெனநிற் சுளிபவ ரிலையெனக் கிரங்காய் பனிமலை கதிர்வந் துறநிலை யாடி பயின்றபீ டிகையென வுதயத் தனிமலை யிருப்ப வளர்ந்தெழுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(4) |
|
|
|
2. துவக்கு-பாசப் பிணிப்பு. மன்றும் பதியும் என்பன தில்லையையும் காசியையும் உணர்த்தி நின்றன. நினைக்கு நின்னகரை-நினைத்த அளவில் முத்தியைக் கொடுக்கும் நினது பதியை. (திருவண்ணாமலை) திகைப்பு-நெறிபிறழ்தலாலுண்டாகும் கலக்கம்; அது நிகழாவாறு மரக்கலமூர்வோர் கரைக்கணுள்ளதொரு குறியினை நோக்கிச் சேறல்போல முத்தியங்கரையிற் படர்பவர் இச் சோணசைலத்தை நோக்கிச் செல்லா நிற்பரென்பது. நோக்கல்-பார்த்தல், தியானித்தல். தவம்-சரியை, கிரியை, யோகம், ஞானம். மரிக்கும்-இறக்கும். பவக்கடல்-பிறவிக்கடல். படர்பவர்-செல்லுகிறவர். 3. வாதபித்த கோழைகளினிடமாகிய உடலில் ஒதுக்கிருந்த யான் அவை என்னை யோட்டுமுன் உமது தனி வீட்டை உரிமையுறப் பெற்று அதில் உறைகுவான் வந்தனனென்பது. வீடு-மோட்சம் தாங்கி-பெயர். உம்மை இறந்தது தழீஇயது. அறை குறையற-சொல்லப்படுகின்ற குறைவு நீங்க. வளி-வாதம். துரந்திடும்-விரட்டும் நிறைமதியைத் தாங்குதல் முழுத்திங்கள் நாளில் என்க. 4. கனி மலை துவர்வாய்-கொவ்வைக் கனியைப் பொரும் செவ்வாய். துனி மலை பிறவி-துன்பத்தால் வருத்தும் பிறவி. பனி மலை கதிர்-பனியைக் கெடுக்குஞ் சூரியன். இச்சோணசைலப் பிரானுக்கு எதிரில் நிறுவிய நிலைக்கண்ணாடிப் பீடம்போல் கின்றது. சூரியனுறுங்கால் உதயகிரி என்றவாறு என்-என்ன காரணத்தால்? சுளிபவர்-சினப்பவர். அரவகல் அல்குலார்பால் ஆசை நீத்தவர்கட்கே வீடாகவும் உருகுங் கொடியனுக்கு ஏன்பிறவி தவிர்த்தனை என்று சுளிபவர்.
|
|
|
|