முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
சுடரிலை நெடுவேற் கருங்கணார்க் குருகித்
      துயர்ந்துநின் றலமரு மனநின்
நடநவில் சரண பங்கய நினைந்து
      நைந்துநைந் துருகுநா ளுளதோ
மடலவிழ் மரைமாட் டெதினென வருகு
      மதியுறக் கார்த்திகை விளக்குத்
தடமுடி யிலங்க வளர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(5)
அருங்கவி வாத வூரனே முதலோ
      ரன்பிலே மென்றது வேண்டி
இரங்குதல் பொய்ம்மை யன்பிலே னெனயா
      னியம்பலே மெய்யெனக் கருளாய்
கருங்கட முமிழு மீர்ங்கவுட் பனைக்கைக்
      கரியுரிக் கஞ்சுகங் கடுப்பத்
தரங்கமுண் டெழுகார் முகில்பயில் சோண
      சைலனே கைலைநா யகனே.
(6)
புரத்துறு மவுணக் குழாமும்வண் டிசைகூர்
      பூங்கணை மதனுமுன் பெறுநின்
சிரித்த வண் ணகையு நுதல்விழி நோக்குஞ்
      சிறியனே னிருண்மலம் பெறுமோ
கருத்தினுங் கருத வரியநுண் ணியனென்
      கடனற வுலகெலாங் காண்பான்
தரித்ததி தூல வடிவறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(7)

5. துயர்ந்து-வருந்தி. மரை-தாமரை; முதற்குறை. எகின்-அன்னம். கார்த்திகைத் தீபம் செந்நிறம் வாய்ந்து ஓங்கியும், பிறை வெண்ணிறம் வாய்ந்து கூனியுமிருத்தலின், அவற்றைச் செந்தாமரை மலரும் அன்னமுமாக உருவகித்தார். சுடரிலைநெடுவேல்-இலை வடிவாகச் செய்யப்பட்டு ஒளிவிடுகிற நீண்டவேல். அலமரும்-சுழலும். நடம்நவில்-கூத்தியற்றுதலைச் செய்கிற. 6. முகில் கஞ்சுகங்கடுப்பப் பயில் என இயையும், கஞ்சுகம்-சட்டை. தரங்கம்-கடல்; ஆகு பெயர். அன்புடையாராயிருக்கவும் இல்லையென்று பொய் கூறிய வாதவூரற்கு அருளினமை அடாது. மெய் கூறு மென்றனக் கருளுதலே கடன். கடம்-மதநீர். ஈர்ங்கவுள்-குளிர்ந்த கன்னம், கடுப்ப-ஒப்ப. பனைக்கை-பனை மரத்தைப்போன்றகை. முகில் பயில்-முகில்கள்படிகின்ற. 7. கடன்-முறைமை. புரம்-முப்புரம். இருண்மலம்-ஆணவமலம். தூலவடிவு-பெரிய மலை வடிவம். நினது வெண்ணகையையும், நுதல் விழி நாட்டத்தையும் எனது ஆணவ மலம்பெற அருளுவையோ?

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்