முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
ஆர்த்தெழு திரைகள் சுருண்டெறி கடனஞ்
      சமுதுசெய் பெரும்புகழ்த் தனிமை
தீர்த்திட வுளங்கொண் டவலனேன் றனைநின்
      றிருவடிக் கண்பனாக் கிலையே
கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து
      கண்டவ ரகத்திரு ளனைத்தும்
சாய்த்துநின் றெழுந்து விளங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(8)
தொடையுடைத் திரடோ ணமன்புறத் துடலந்
      தொலைக்குமு னகத்துட றொலைத்துத்
தடையறத் திகழ்பே ரறிவுரு வாகத்
      தமியனேற் கருளுநா ளுளதோ
புடையினிற் கரிக்கோ டிளம்பிறை புரையப்
      பொங்குசோ தியங்கொடி விரித்த
சடையெனப் படர்ந்து கிடந்தொளிர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(9)
கண்புன றுளிப்ப வழற்படு மிழுதிற்
      கரைந்துகு நெஞ்சினின் றனையே
பெண்பயி லுருவ மொடுநினைந் தெனது
      பெண்மய லகற்றுநா ளுளதோ
வண்புனல் வேந்த னார்கலிக் குடத்து
      மணிமுகிற் கலயத்தின் முகந்து
தண்புன லாட்ட வாடுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(10)

8. ஆர்த்தெழு திரைகள்-ஆரவாரித்தெழும்அலைகள். அவலனேன்-வீணானவன். அடியேன் நஞ்சினும் கொடியேனாகையால் நீ ஆளவில்லையென்பது கருத்து 9. தொடை-மாலை. அகத்துடல்-அஞ்ஞானம். அறிவுருவாக-வீடுபேற்றையடைய. புடை-பக்கம். கரிக்கோடு-யானைத்தந்தம். புரைய-ஒப்பாகவிளங்க. சோதியங்கொடி-இரவில் ஒளிவீசுதலையுடைய ஒருவகைக் கொடி 10. புனல்-நீர். அழல்-தீ. இழுது-வெண்ணெய். ஆர்கலி-கடல். வருணன் முகிற்குடத்தால் மொண்டு நீராட்டினாலன்றி நீ நீராடுதல் அருமை என்பது குறிப்பு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்