முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
இறைவியையெய்திப் பாங்கிகையுறைகாட்டல்
முட்டுப் படாத திருவாளன் வெங்கை முளரிமுகை
நட்டுப் படாத விளமுலை யாயுன் னகையுடனே
மட்டுப் படாம லிகலுந் தளவின்று மட்டுப்பட்டுக்
கட்டுப் படாமலென் கைக்கேவந் துற்றது கண்டருளே.
(187)
இற்கொண்டேகல்
சூடுந் துளப மணிநீல வெற்புந் தொடர்ந்துமுனம்
நாடுந் திருவடி யெம்மான் றிருவெங்கை நாடனையாய்
ஆடுங் கலாப மயில்போ லுறங்குநம் மன்னையினாற்
றேடும் பொருளல்ல மோசெல்லு வோநந் திருமனைக்கே.
(188)
பிற்சென்றிறைவன் வரவுவிலக்கல்
தம்மேற் பணிபுனை வெங்கைபு ரேசரைச் சார்கிலர்போற்
கைம்மேற் பொருடெரி யாவிருள் வாய்வெங் கரியுடனே
தென்மேற் புலிதிரி யுங்காட்டி னீயிச் சிறுவழிவந்
தெம்மேற் பழிசுமத் தாதகல் வாயெம் மிறையவனே.
(189)
பெருமகன்மயங்கல்
ஆய்வா ரளவி னளவாகும் வெங்கை யமலர்வெற்பிற்
றேய்வா னுடங்கிடை யாயறிந் தாரைச் செலவிடுப்போர்
போய்வென் பாரிவ் வுலகினிற் போவென வேமுடித்து
நீவாவென் றாயிலை கண்ணோட்ட மில்லைகொ னின்றனக்கே.
(190)

187. முட்டுப்படாத-குறையுண்டாகாத. திருவாளன்-செல்வன். முளரி-தாமரை. நட்டல்-நட்புச் செய்தல். நகை-பல். மட்டு-அளவு. தளவு-முல்லை. மட்டு-தேன். 188. துளபம்-துளசிமாலை. நாடுதல்-தேடுதல். கலாபம்-தோகை. 189. சார்கிலர் போல் வந்து என இயையும். தெவ்-போர். பழி-பழிச்சொல். 190. ஆய்வார் என்றது பக்குவிகளை. அமலர்-தூயவர். செலவிடுத்தல்-அனுப்புதல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்