| 9. திருவெங்கைக்கோவை |
|
| பாங்கிதலைவன் றீங்கெடுத்தியம்பல் |
| |
| |
மறிக்கும் புலனுடை யன்பர்தம் பாவ மரமுறியத் தறிக்குங் கனன்மழு வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில் வெறிக்குங் குமமுலை மெல்லிய லாயிந்த மேதினியோர் குறிக்குங் குறிசெய்வ ரோநமை யாளக் குறித்தவரே.
|
(195) |
| |
| புலந்தவன் போதல் |
| |
| |
மறந்தடுக் குஞ்செயல் வெங்கைபு ரேசர் மறைவனத்தில் அறந்தழைக் குந்திரு வாலயம் போலுல காரிருளைப் பிறந்தழித் தென்று மொளியோ டுலாவரும் பேரிருவர் திறந்தடைக் கின்றதன் றோநெஞ்ச மேநந் திருமனையே.
|
(196) |
| |
| புலர்ந்தபின் வறுங்களந் தலைவி கண்டிரங்கல் |
| |
| |
பணஞ்செய் பொறியிள நாகா பரணர் பகைதடிந்து நிணஞ்செய் சுடர்மழு வெங்கைபு ரேசர் நெடுஞ்சிலம்பிற் குணஞ்செய் கதிரிலை வேலன்பர் தாங்குளிர் மாலையிட்டு மணஞ்செய் தனரென வோதழைந் தாய்மலர் மாதவியே.
|
(197) |
| |
| தலைமகள் பாங்கியோடுரைத்தல் |
| |
| |
நல்லார் தொடர்பிளங் காய்முதிர் வாமென நாடுரைப்ப அல்லார் மணிமிடற் றெம்மான் றிருவெங்கை யாதிவெற்பில் மல்லார் திணிபுயத் தன்பர்நம் பான்முனம் வைத்தநட்பு வில்லார் சிறுமென் றளிர்முற்ற லாகி விளைந்ததுவே.
|
(198) |
| |
| தலைமகளவலம் பாங்கிதணித்தல் |
| |
| |
தீங்கையொன் றானு முறுகிலர் போற்றுந் திருவடியான் காங்கையன் றாதைதன் வெங்கையி லேபைங் கனகநிறக் கோங்கைவென் றோங்கு முலையாய்நம் மன்பர் குறிபிழையார் வேங்கையென் றாயினும் பூத்ததுண் டோமுல்லை மென்மலரே.
|
(199) |
| |
|
| |
195. மறிக்கும்-தடுக்கும். தறிக்கும்-வெட்டுகிற. குறித்தல்-செய்தல்; நினைத்தல். 196. மறம் தடுக்கும்-தீவினையைப் போக்கும். மறைவனம்-திருமறைக்காடு. 197. பணம்-படம். பொறி-புள்ளி. தடிதல்-வெட்டுதல், நிணம்-கொழுப்பு. சிலம்பு-மலை. மாதவி-குருக்கத்தி. 198. தொடர்பு-நட்பு. முதிர்வு-முதிர்தல். அல்-இருள். மணி-நீலமணி. மிடறு-கண்டம். மல்-மற்றொழில். திணி-திண்மை, வலி. வில்-ஒளி. 199. உறுகிலர்-அடையாதவர். காங்கையன்-முருகன். கோங்கு-கோங்கரும்பு.
|
|
|
|