முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
இறைவன்மேற்பாங்கி குறிபிழைப்பேற்றல்
பொருவோ விலர்திரு வெங்கையி லேமுன் புனத்திலெமை
உருவோ டுயிரமு தென்றுபொய் கூறி யுழன்றவரே
வெருவோ மிரவும் பழியுமும் மூர்க்க வினவிவழி
வருவோம் வரினு மெமைநோக்கு றீரென வந்திலமே.
(200)
இறைவிமே லிறைவன் குறிபிழைப் பேற்றல்
நறவே யிதழியுங் கங்கையும் பாம்பு நகைமதியும்
உறவே யணியு மணிமுடி யார்வெங்கை யூரனைய
புறவே யிளமயி லேயமு தேபசும் பொற்கொடியே
மறவே னுனையென்று நீநினை யாமன் மறப்பினுமே.
(201)
தலைவி குறிமருண்டமை பாங்கி தலைவற்குரைத்தல்
ஈயா தவரைக்கண் டீவ ரெனச்செல் லிரவலர்போற்
போயாவி யிற்சிறு மாங்கனி வீழப் புரவலனே
நீயாவி யிற்செய் குறியென வேசென்று நித்தர்வெங்கை
வீயா மலர்க்குழ லாள்வறி தேநொந்து மீண்டனளே.
(202)
அவன்மொழிக்கொடுமை பாங்கியவட்கியம்பல்
கள்ளெழுங் கொன்றையர் வெங்கையி லேமைக் கடலின்மதி
நள்ளெழுங் காலம் பெறவே குறியிட நான்மருவி
உள்ளெழுங் காம மருந்து பெறாம லுழன்றுசென்றேன்
புள்ளெழுங் காலையென் றாரன்பர் தாமிளம் பூங்கொடியே.
(203)

200. உயிர் அமுது-சீவ அமுதம். உழன்றவர்-திரிந்தவர். வெருவோம்-அஞ்சோம். 201.01. நகைமதி-ஒளியுள்ள இளம்பிறை. உற-பொருந்த. 202.02. வீயாமலர்க் குழலாள்-மலர் நீங்காத கூந்தலையுடையவள். ஈயாதவர்-உலோபர். இரவலர்-இரப்போர். நித்தர்-அழியாதவர். வீஆம் மலர் என்று பிரிப்பின் வண்டுகள் மொய்க்கும் மலர் என்க. 203.03. கள்-தேன். எழுதல்-பெருகுதல். மை-கருமை. நள்-நடு. மதி-மதுவையுடையது. மருவல்-பொருந்தல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்