முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
அலர்பார்த்துற்ற வச்சக்கிளவி
கலரா லறிவரி யார்வெங்கை வாணர் கனகவெற்பிற்
பலரா லணியும் புகழார் பிறப்பொன்றிற் பாவிமதன்
மலரால் வருந்துயர் நீக்குவ ராயினு மண்ணுளர்வாய்
அலரால் வருந்துயர் நீக்குகிற் பாரை யறிந்திலமே.
(222)
ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி
ஒருகோடு தம்மிற் குறைந்தநல் வாரண மொன்றுமன்றி
இருகோடு வந்து மிகுங்களி றேனு மிகன்மதமா
அருகோடு வெவ்வத ரென்றாலும் வெங்கை யமலர்தரும்
முருகோ டுறழும் வடிவா ரிடைமன முந்துறுமே.
(223)
காமமிக்க கழிபடர்கிளவி
மாமாய னுந்தொழும் வெங்கைபு ரேசர் மணிவரைமேற்
பாமா முனிவன் மலயா நிலமொரு பாலசைய
வேமாயர் வேய்ங்குழ லாலூத மேனி விறகிற்பற்றுங்
காமா னலமவி யாகட லேழுங் கவிப்பினுமே.
(224)
தன்னுட்கையா றெய்திடுகிளவி
வம்புற் றனைவெண் மதியா லொடுங்கினை வண்டிழந்தாய்
அம்புற் றனைமிகு கண்முத் துகுத்தனை யம்புயமே
நம்புற் றரவணி யெம்மான் றிருவெங்கை நாட்டிறையை
வெம்புற் றனையெனைப் போலென்ப தின்று வெளிப்பட்டதே.
(225)

222.22. கலர்-கீழ்மக்கள். மண்ணுளர்-மண்ணுலகில் உள்ளவர். வாயலர்-பழிச்சொல். 223.23. வெம் அதர்-கொடிய வழி. முருகோடு உறழும்- முருகரை நிகர்த்த. ஒருகோடு குறைந்த வாரணம்-ஆனைமுகக் கடவுள். 224.24. பாம்-எங்கும் பரவும், பாவும் என்பது பாம் என இடைக் குறையாயிற்று. மலயாநிலம்-தென்றற்காற்று. வேம்-வெந்த; வேவும் என்பது வேம் எனக் குறைந்து நின்றது. காமாநலம்-காமத்தீ. 225.25. வம்பு-தீச்சொல்; மணம். வெண்மதி-வெள்ளறிவு; வெள்ளிய திங்கள். வண்டு-வளையல்; வண்டுகள். இருகண்முத்து-இரு கண்ணீர். வெம்புறல்-விரும்பல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்