முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
குரவரை வரைவெதிர்கொள்ளுவித்தல்
பூண்கொண்ட மென்முலை யாய்வெங்கை வாணர் பொதியவெற்பில்
ஏண்கொண்ட நங்கருத் தீன்றவர்க் கோது மிசைவுபெறா
நாண்கொண்டு நங்கற் பழிதனன் றோவன்றி நாணிழந்து
மாண்கொண்ட வங்கற் புறுதனன் றோநம் மரபினுக்கே.
(230)
வரைவு கடாதல்
வினவியசெவிலிக்கு மறைத்தமைவிளம்பல்
வண்டு கலிக்குந் தொடையாயெம் மன்னையிம் மாதுதுயில்
விண்டு தரித்தில ளென்கொலென் றாளரன் வெங்கைவெற்பிற்
பண்டு புனத்தில் வருமத வாரணம் பாய்கனவு
கண்டு பினைத்துயின் றாளிலை யென்று கரந்தனனே.
(231)
அலரறிவுறுத்தல்
கோட்டு மலைவில் விறலாளர் வெங்கைக் குளிர்சிலம்பிற்
றீட்டு மிலைமலி வேலண்ண லேநின் றிருக்கரத்தால்
வேட்டு மகிழ்செய் யணங்கென வேயிவண் மென்குழலிற்
சூட்டு மலர்கண் டுலகமெ லாமலர் சூட்டியதே.
(232)
தாயறிவுணர்த்தல்
நீர்பூத்த செஞ்சடை யார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பிற்
கார்பூத்த வண்மை மடங்கலன் னாயன்னை காலமன்றி
ஏர்பூத்த பைந்தளிர் மெல்லிய லாமிவ் விளங்கொடிமேற்
பீர்பூத்த தென்னைகொ லோவறி யேனெனப் பேசினளே.
(233)

230. பூண்-அணிகலம். இசைவு-உடன்பாடு. நாண்-நாணம். மாண்-பெருமை. 231. கலிக்கும்-ஒலிக்கும். துயில் விண்டு-துயில் நீங்கி. பாய்-பாய்ந்த. தரித்திலள்-ஆற்றிலள். கரத்தல்-மறைத்தல். 232. கோட்டும்-வளைத்த. விறல்-வெற்றி. தீட்டுதல்-கூராக்கல். அலர் இரண்டனுள் முன்னையது மலர், பின்னையது பழிதூற்றல். 233. பீர்-பசலை. வண்மை-வள்ளன்மை. மடங்கல்-சிங்கம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்