முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
குறிபெயர்த்திடுதல்
ஐயுற் றெமர்தெளி வானிருந் தார்நும் மடிச்சுவடு
கொய்யுற்ற பூம்பொழி லூடுகண் டேமென் குழலுமையாள்
மெய்யுற்ற வங்கணர் வெங்கையி லேகுறி வேறுகொண்டு
மையுற்ற கண்ணி யொடும்விளை யாடுக மன்னவனே.
(239)
பகல்வருவானை யிரவுவருகென்றல்
நந்தே டவிழ்ந்து நறவூற் றிருக்கு நளினமிசை
வந்தேறி மென்றுயில் கொள்வெங்கை வாணர் வரையின்மலர்க்
கொந்தேறு மென்குழ லாண்முக வாவிக் குமுதமலர்ச்
செந்தே னிரவினல் லாற்கிடை யாதென்ன செய்யினுமே.
(240)
இரவுவருவானைப் பகல்வருகென்றல்
சேல்கொண்ட தண்பணை சூழ்வெங்கை வாணர்தஞ் சேய்திருக்கை
வேல்கொண்ட கண்ணிளம் பெண்ணோடு கூட விருப்பமுறும்
மால்கொண்ட வெங்களி றன்னாய் மலர்மனை வாய்திறக்குங்
கோல்கொண்டு வந்திலை யேலரி தாலவட் கூடுதலே.
(241)
பகலினுமிரவினும் பயின்றுவருகென்றல்
சொல்லும் பொருளு மெனநிறை வாரிளஞ் சூன்மிடற்ற
நெல்லுங் கரும்பு நிறைவெங்கை வாணர் நெடுஞ்சிலம்ப
வில்லும் பிறையும் பணிவா ணுதற்றளிர் மெல்லியலை
அல்லும் பகலு மகலா திவண்வந் தடைந்தருளே.
(242)
பகலினுமிரவினு மகலிவணென்றல்
பாவலர் பாடும் புகழ்வெங்கை வாணர் பனிவரைமேல்
மேவல ராருயி ருண்டமை வேலவ வெம்பகலில்
ஏவல ராய நெருங்குமின் றேன்வண் டெனவிரவிற்
காவலர் சூழ்ந்து திரிவார்பொன் காத்த கடியெனவே.
(243)

239. சுவடு-அடையாளம். கொய்தல்-பறித்தல். மெய்-திருமேனி; இஃது இடப்பாகத்தைக் குறித்தது. அங்கணர்-அருளையுடைய கண்ணர். 240. நந்து-சங்கு. நறா-தேன். நளிநம்-தாமரை. குமுதம்-செவ்வல்லிமலர். இது தலைவியின் வாயை உணர்த்திற்று. 241. சேல்-மீன்வகைகளில் ஒன்று. பணை-வயல். சேய்-முருகக் கடவுள். மால் - மதமயக்கம். மலர்மனை வாய்திறக்குங் கோல் என்றது கதிரவன் ஒளிப்பிழம்பை. திறக்குங் கோல்-திறவு கோல். 242. இளம்சூல் மிடற்ற-இளஞ்சூலைக் கொண்ட கழுத்தினையுடைய. எங்கும் நிறைந்தவர் என்பார் சொல்லும் பொருளுமென நிறைவார் என்றார். 243. பாவலர்-சமயாசாரியர்கள் நால்வர். மேவலர்-பகைவர். ஆயம்-தோழியர் கூட்டம். காவலர்-ஊர்காவலர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்