முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
உரவோனாடு மூருங்குலனு மரபும்புகழும் வாய்மையுங்கூறல்
துதியுந் தொடையும் புனைபுயத் தாய்மணஞ் சூழ்ந்திலையேல்
நதியும் பணியும் புனைவே ணியர்வெங்கை நாட்டினினின்
பதியுங் குலனு மரபுநல் வாய்மையும் பல்புகழும்
மதியுங் களங்கமும் போலொழி யாமன் மறுப்படுமே.
(244)
ஆறுபார்த்துற்ற வச்சங்கூறல்
அரியும் பணியுந் திருவெங்கை வாண ரடியரல்லார்
திரியும் பலநெறி போன்றொழி யாதிரை தேர்ந்துகொடு
வரியுங் கரியுஞ் செறியுஞ் சிறுவழி வாரலைநீ
புரியுங் கருங்குழ லாள்பொருட் டாகப் புரவலனே.
(245)
ஆற்றாத்தன்மை யாற்றக்கூறல்
அழுவாண் மொழிதளர் வாளைய கோவென் றலமருவாள்
விழுவாள் புரண்டெழு வாள்வெங்கை வாணரை வேண்டியடி
தொழுவா ளநங்கன் கொடியனென் பாளுயிர் சோர்ந்திடுவாள்
முழுவாள் விழிமட மாதெண்ண மன்ப முடித்தருளே.
(246)
காவன்மிகவுரைத்தல்
ஆக்குறுங் காரணர் வெங்கைபு ரேச ரணிவரையாய்
தாக்குறுஞ் சீயமும் வேழமும் வேங்கையுந் தப்பிவந்து
மாக்குறுஞ் சோலையெம் மூர்புகுந் தாலு மனையருகு
காக்குறுங் காவலர் தம்மையெவ் வாறு கடப்பதுவே.
(247)
காமமிகவுரைத்தல்
தாள்வலி கொண்டு பகடுந்து காலன் றனைமருட்டும்
ஆள்வலி கொண்டவர் வெங்கைவெற் பாநின் னணியலர்கற்
றோள்வலி கொண்டு தவிர்ப்பினல் லாமற் றுயர்விளைக்கும்
வேள்வலி கொள்ளுந் துணையெங்கள் பேதைக்கு வேறில்லையே.
(248)

244. மணஞ்சூழ்தல்-வரைதல். ஒழியாமல்-எப்பொழுதும் நீங்காமல். மறு-குற்றம்; களங்கம். படுதல்-உண்டாதல். 245. அரியும் என்ற உம்மை உயர்வு சிறப்பு. அடியரல்லார்-தீவினையாளர்கள். செறிதல்-நெருங்குதல். புரிதல்-விரும்புதல். 246. மொழிதளர்தல்-சொற்குழறுதல். அலம்வரல்-சுழலல். அநங்கன்-காமன். முழுவான்-பெரிய வான். 247. ஆக்குறும்-எல்லாவற்றையும் படைக்கின்ற. தாக்குறும்-ஒன்றோடொன்று முட்டிப் பொரும். சீயம்-சிங்கம். வேழம்-யானை. 248. பகடு-எருமைக் கடா. மருட்டல்-வெல்லல். ஆள்வலி-ஆளும் வலி. கொள்ளல்-கவர்தல். பகடுந்துகாலன் றன்னைத் தாள்வலி கொண்டு மருட்டும் எனக் கூட்டுக.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்