முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
கனவுநலிபுரைத்தல்
மனவே யணியுந் திருவெங்கை வாணர் வரையணங்கு
சினவே லிறைவநின் றோளொடு கொங்கை திளைக்கவருங்
கனவே யுயருந் துறக்கமென் பாணினைக் காண்பரிய
நனவே துயரந் தருகின்ற தீவெந் நரகென்பளே.
(249)
கவினழிபுரைத்தல்
கருவரை யெங்க டிருவெங்கை வாணர்தங் கண்ணழித்த
ஒருவரை யன்ன வெழிலுடை யீரிங் குமதருளால்
இருவரை பொன்னு மிருவேலை முத்தமு மீன்றனவாற்
குருவரை யன்னமென் றோளுடை யாட்குக் குறையென்னையே.
(250)
ஒருவழித்தணத்தல்
தன்பதிக்ககற்சி தலைவன்சாற்றல்
என்மன நல்லிளம் பூங்கொடி பால்வைத் திளங்கொடிதன்
நன்மன மென்னொடு கொண்டூர் புகுந்திங்கு நான்வருவேன்
வன்மனம் வந்து புகாவீசர் வெங்கை மருவலர்போல்
நின்மன மஞ்சலை செங்கயல் வாட்கண் ணிரைவளையே.
(251)
பாங்கிவிலக்கல்
ஊனா ருடலி னுயிர்போல வேயவ் வுயிரினுயிர்
தானா மொருவன் றிருவெங்கை வெற்பிலுன் றன்பதிக்குப்
போனால் விரைந்து வருவா யலையன்ப போகலைநீ
யானா யிழைதுயர் கண்டாவி கொண்டிங் கிருக்கிலனே.
(252)

249. மனவு-அக்குமணி. துறக்கம்-சுவர்க்கம். திளைத்தல்-அழுந்தல். காண்பு-காண்டல். 250. கருவரை-கருப்ப வேதனையை ஒழிக்கின்ற. அஃது இங்குப் பிறவியென்னும் பொருட்டு. கண்ணழித்த-கண்ணால் அழிக்கப்பட்ட. 251. இளம்பூங்கொடி என்றது தலைவியை. ஊர் புகுந்திங்கு நான் வருவேன் என்றது அங்குத் தாழ்க்காது விரைந்து வருவேன் என்றபடி. வன்மனம்-வன்னெஞ்சு. 252. ஊன்-ஆகு பெயர். ஒருவன்-ஒப்பிலி. பதி-ஊர். ஆவி-உயிர். ஆயிழை-அன்மொழித் தொகை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்