முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தலைவனீங்கல்வேண்டல்
நீர்புக்கு வாழு நெடுமீனந் நீர்தனை நீங்கியுய்ந்தாற்
றார்புக்கு வாழு முலையாளை யானுந் தணந்துய்குவேன்
மார்புக்கு மாலை யரவா னவர்வெங்கை வாணர்வெற்பில்
ஊர்புக்கு நான்வர வேண்டுமின் னேநின் னுளத்திசையே.
(253)
பாங்கிவிடுத்தல்
கொந்தார் மலர்க்குழல் வெண்முத்த வாணகைக் கோமளத்தின்
சிந்தா குலமுற்று நீயறி வாயன்ப தேமொழிக்கு
நந்தா மணிவிளக் கன்னார்தம் வெங்கை நகரினிற்போய்
வந்தா ரெனச்சென்று நான்கூற நீசென்று வந்தருளே.
(254)
பாங்கிதலைவிக் கவன்செலவுணர்த்தல்
அம்மூல காரணர் வெங்கைபு ரேச ரணிவரைமேற்
செம்மூரி வேலவர் நீயா ரணங்கின்முன் செல்லுமுனம்
எம்மூர் புகுந்து வருவலென் றேகின ரேந்திழையாய்
நம்மூர் மருங்குற விந்தேரம் வந்து நணுகுவரே.
(255)
தலைவிநெஞ்சொடு புலத்தல்
விளித்தா ருயிரை யடிநீழல் வைப்பவர் வெங்கையிலே
அளித்தார் புனைகுழ லாயக லேனென் றகந்தெளியத்
தெளித்தா ரகன்றன ரேலவர் வார்த்தை தெளிந்துமனங்
களித்தார் தமக்குள தோபிழை தானிந்தக் காசினிக்கே.
(256)

253. உய்தல்-உயிர் வாழ்தல். தார்-முத்துமாலை, பூமாலை. தணத்தல்-பிரிதல். மின் : உவமையாகுபெயர். இசைதல்-உடன் படல். 254. கொத்து-கொந்து என மெலிந்து நின்றது. கோமளம்-பண்பாகு பெயர். சிந்தாகுலம்-வடநூன் முடிபு. 255. மூல காரணர்-உலகத் தோற்ற மறைவுகட்குக் காரணமாக இருப்பவர். மருங்கு-அருகு. நணுகல்-சேர்தல். 256. விளித்தார்-சாங் காலத்தில் கூப்பிட்டவர். விளிந்தார் என்பது விளித்தார் என வலித்தல் பெற்றதென்றலு மொன்று. விளிதல்-இறத்தல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்