முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
பாங்கி வலம்புரிகேட் டவன்வர வறிவுறுத்தல்
தெண்ணீர் முடியர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்
புண்ணீர் முழுகு மிலைவே லிறைவர்பொற் றேரின்மிசைப்
பண்ணீர் மொழியணங் கேகிளர்ந் தார்க்கும் பணிலமுன்றன்
கண்ணீர் வழியடைத் தற்குரித் தாகிய கல்லெனவே.
(279)
வலம்புரி கிழத்தி வாழ்த்தல்
வேயின் கவின்புனை தோளுமை பங்கர்தம் வெங்கைநகர்க்
கோயின் முனம்புகுஞ் சங்கென வாழ்கநங் கொண்கர்சுரம்
போயின் றணைவ லெனவோ தியமொழிப் பொய்மைபடா
வாயின் புகழ்திரண் டாலென வார்க்கும் வலம்புரியே.
(280)
தலைவன்வந்துழிப் பாங்கி நினைத்தமைவினாவல்
அம்மை யிடத்தர் திருவெங்கை வாண ரணிவரையெங்
கொம்மை முலைத்தட மெல்லாம் பசலை கொளக்கொடுத்துச்
செம்மை மனத்திற் பொருள்விழைந் தார்தரச் சென்றவிடத்
தெம்மை நினைத்ததுண் டோவிலை யோசொல் லிறையவனே.
(281)
தலைவ னினைத்தமை செப்பல்
புறந்தாழ் குழலுமை பங்காளர் வெங்கை புரத்தரயன்
பறந்தாலு மென்னென் றிருக்கின்ற வேணிப் பரமர்தமைத்
துறந்தார் மனமென வெங்கொடுங் காட்டுச் சுரத்திடைநான்
மறந்தா னினைத்தலு முண்டுபொன் னேயுயங்கள் வஞ்சியையே.
(282)

279. தெண்ணீர் என்றதுவிண்ணகக்கங்கையை. முடி-சடை. புண்ணீர்-இரத்தம். பொற்றேர்-அழகிய தேர். 280. வேய்-மூங்கில். கவின்-அழகு. சுரம்-அருநெறி. பொய்மைபடுதல்-பொய்படுதல். 281. எங்கொம்மை முலைத்தடம் என்றாள் தனக்குந் தலைவிக்கும் ஒற்றுமையுண்மையான். சென்றவிடத்து-பொருள்தேடச் சென்றவிடத்து. 282. என்னென்றிருத்தல்-பராமுகமாயிருத்தல். பரமர்-மேலானவர். பறத்தல்-அன்னமாகப் பறந்த வரலாறு குறித்தது.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்