முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
பாங்கி தமர்வரைவெதிர்ந்தமை தலைவிக்குணர்த்தல்
புரவல ரொக்குங் குடிவாழும் வெங்கை புரத்தரிந்தீ
வரவல ரொக்கு மிடற்றார்தங் கையிள மான்விழியாய்
இரவல ரொக்கு மிறையோன் முலைவிலை யின்மொழியாற்
றரவல ரொக்கு மெதிர்புகுந் தார்க்குந் தடமுரசே.
(286)
தலைமக ளுவகையாற்றா துளத்தொடுகிளத்தல்
வில்லுங் கணையு மதவேளு மாய விழித்தவரெஞ்
சொல்லும் புனையுந் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
கொல்லுந் துயர முலைமேற் பசப்பினைக் கொண்டுநெஞ்சே
செல்லுஞ் செலவை யுணர்த்திய தாமிச் செழுமுரசே.
(287)
தலைவனைப் பாங்கிவாழ்த்தல்
கணத்தி னிலங்கு மதிப்பிள்ளை யொன்றிளங் கட்செவியின்
பணத்தி னுறங்குஞ் சடையாளர் வெங்கைப் பனிவரைமேற்
குணத்தி னுயர்ந்த கொடியிடை யாவி கொடுப்பதற்கா
மணத்தி னலங்கல் புனையுநங் காதலர் வாழியவே.
(288)
தலைவிமணம்பொருட்டாக வணங்கைப்பராநிலைகாட்டல்
நிலமா தணிநிகர் வெங்கையு ளான்றரு நீமுனமெங்
குலமா தினைமணஞ் செய்தாங் கெனையுங் கொழுநர்வந்து
நலமா மணம்புணர்ந் தால்விழ வாற்றுவ னானெனவே
பலமா தருந்தொழும் பாவைசெவ் வேளைப் பரவுறுமே.
(289)
அதுகண்டோன் மகிழ்தல்
மால்பற் றியபொழில் வெங்கைபு ரேசர் மணிவரைமேற்
சேல்பற் றியவிழி யாளுல கோர்முனஞ் செங்கையினாற்
கால்பற்றி யம்மியின் மீதே யிருத்தல் கடைப்பிடித்து
வேல்பற் றியதெய்வ சூளா மணியினை வேண்டுமென்னே.
(290)

286. இந்தீவரம் அலர் ஒக்கும்-கருங்குவளை மலரை நிகர்த்த. தடமுரசு-பெரிய முரச வாத்தியம். 287. கணை-அம்பு. மதவேள்-இருபெயரொட்டு. மாய்தல்-மடிதல். புனைதல்-தரித்தல். பசப்பு-பசலைநிறம். செலவு-போக்கு. 288. கணம்-விண்மீன். மதிப்பிள்ளை யொன்று-ஒருதலையாகிய திங்கள். கொடியிடை-அன்மொழித் தொகை. அலங்கல்-தொழிலாகு பெயர். 289. விழா-திருவிழா. ஆற்றல்-செய்தல். பாவை-ஆகுபெயர். பரவுறல்-வழிபடல். 290. மால்-மேகம். பற்றல்-தவழ்தல். கடைப்பிடித்தல்-உறுதியாகப் பற்றுதல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்