முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
நீரினி லெழுமொக் குளினழி யுடம்பு
      நிலையென நிலைக்குமா னந்த
வாரிதி படிய வறிந்திடா துழலு
      மடைமையே னுய்யுநா ளுளதோ
ஏரியல் பதமுன் றேடுமக் கேழ
      லின்றுநா டியகிளைத் திடல்போற்
சாரலி னேன மருப்புழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(14)
கருத்திடை நினது கருணைமா மேனி
      கண்டெழுத் தைந்துநா வியம்பச்
சிரத்தினி லமைத்த கரத்தொடு நினையான்
      தினம்வலம் புரியுமா றருளாய்
வரத்திரு முடியின் மதிதிரு முடியின்
      வனைந்துகந் தரத்தினி லிருள்கந்
தரத்தினி லிருத்தி விளங்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(15)
பாரெலா மிகழு மிகழ்ச்சியும் புகழ்ச்சிப்
      பயனென வுணர்ந்துநா டொறுமா
ரூரனா ரவையி னிகழ்ந்தசொற் றுதியி
      னுவக்குநின் பதந்தொழ வருளாய்
ஏருலா மண்டச் சுவர்மதின் மிசைப்பா
      லிலங்குறு மண்டகோ ளகையாச்
சாருமா லயத்தி லிலிங்கமாஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(16)

14. வாரிதி-கடல். கேழல்-பன்றி. மொக்குள்-நீர்க்குமிழி. நிலைக்கும்-என்றும் நிலைபெற்றுவிளங்கும். கிளைத்திடல்-தோண்டுதல். ஏனம்-பன்றி. மருப்பு-கொம்பு. 15. வரம்-மேன்மை. வனைந்து-சூடி. கந்தரம்-குகை, கழுத்து. 16. பயன்-பொருள். சிவபெருமானுக்கு இகழ்ச்சி மொழியும் புகழ்ச்சிப் பொருளதென்பது கருத்து. இதனை இவ்வாசிரியரருளிய சிவநாம மகிமையின் அ-ஆவது பாடலினுமுணர்க. உணர்ந்து-நாடொறும் தொழ என இயையும், மிசைப் பால்-மேற்பரப்பு. கோளகை-மேற்கடாகம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்