முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தலைமக ளியற்படமொழிதல்
உழைகா தலிக்குங் கரத்தார் நிறைமதி யொத்தசங்கக்
குழைகாதிற் பெய்பவர் தென்வெங்கை வாணர் குளிர்சிலம்பின்
மழைகா தலிக்குங் கொடையன்பர் மேற்பிறர் வாயுரைக்கும்
பிழைகாதிற் கேட்பவந் தோபடைத் தானயன் பெண்பிறப்பே.
(295)
தெய்வம்பொறைகொளச் செல்குவமென்றல்
புற்றங் கதமணி வெங்கைபு ரேசர் பொருப்பிலெங்கள்
சுற்றந் தொழுமெங் கொழுநர்நிற் காட்டிமுன் சூளுரைத்த
குற்றம் பொறுத்தரு ளென்றடி போற்றிக் கொழுமலர்தூய்ச்
செற்றந் தணிக்குதும் பெண்ணே யினிக்குல தெய்வத்தையே.
(296)
தலைவி யில்வயிற்செறித்தமை யியம்பல்
சுட்டா வறிவுரு வானாரவ் வானிற் சுரர்தமக்குங்
கிட்டா வமுதனை யார்வெங்கை வாணர் கிரியணங்கே
மொட்டா முலையிற் பசலைகண் டேமனை முன்றில்விடாள்
இட்டா ளிலைவிலங் கென்பதொன் றேகுறை யீன்றவட்கே.
(297)
செவிலி கனையிரு ளவன்வரக் கண்டமைகூறல்
மீனைக் கடந்த பொழில்சூ ழரன்றிரு வெங்கைவெற்பர்
கானைக் கடந்து குறிவா யிருள்வரக் கண்டனள்யாய்
மானைக் கடந்த விழியாய் தரள மணிவடத்த
ஆனைக் கடந்த விளஞ்சிங்க மோவென் றயிர்த்தனளே.
(298)

295. உழை காதலிக்கும் கரத்தார் என்றமையால் திருக்கையின் பேரழகு பெறப்படும். சங்கக்குழை-சங்கினாலியன்றதோடு. பெய்தல்-இடுதல். மழை காதலிக்கும் கொடையன்பர் என்றமையால் பெருங்கொடையார் என்பது பெறப்படும். அந்தோ-இரக்கக்குறிப்பு. பிறர் என்றது பாங்கியை. 296. அங்கதம்-பாம்பு. பொருப்பு-மலை. சுற்றம்-ஆகுபெயர். சூளுரைத்தல்-உறுதியாக ஆணையிடல். செற்றம்-கோபம். 297. மனோவாக்குக் காயங்களாற் சுட்டியறியப்படாதவராகலானும் ஞானவடிவாயிருப்பவராதலானும் இறைவர் சுட்டாவறிவுருவானார் என்று சுட்டப்பட்டார். மொட்டு-அரும்பு. 298. மான்விழி-ஆகு பெயர்கள். வெற்பர்-மலை நாடர். கான்-காடு. யாய்-தாய்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்