| 9. திருவெங்கைக்கோவை |
|
| எறிவளைவேற்றுமைக் கேதுவினாதல் |
| |
| |
கனம்வேறு பட்ட மிடற்றார்தம் வெங்கைக் கனகவெற்பில் புனம்வேறு பட்டிங்கு வந்தவன் றேநம் புரிகுழற்குத் தனம்வேறு பட்டு விழிவேறு பட்டுத் தளர்ந்துமொழி மனம்வேறு பட்டதென் னோவுரை யாய்செவ் வரிக்கண்ணியே.
|
(299) |
| |
| பாங்கி வெறிவிலக்கல் |
| |
| |
வீட்டை யுவந்து தருவார் திருவெங்கை வெற்படுத்த காட்டை விரும்பி யுறைதெய்வ மேயெங்கள் கன்னிபடும் பாட்டை நினைந்திலை வாளா வுலகிற் பலர்விரும்பும் ஆட்டை விரும்பினை நன்றோ விதுசொல் லறிவினுக்கே.
|
(300) |
| |
| வெறிவிலக்கியவழி செவிலிவினாதல் |
| |
| |
மின்னோ டுவமிக்குஞ் செஞ்சடை யார்திரு வெங்கைவெற்பிற் பொன்னோய் விலக்குவ மென்றெண்ணி யாங்கள் புகும்பொழுதில் என்னோ வெறிவிலக் குற்றா யிளமுலை யேந்திழையாள் தன்னோ யறிந்தனை யேலுரை யாய்மைத் தடங்கண்ணியே.
|
(301) |
| |
| பூத்தருபுணர்ச்சியா லறத்தொடுநிற்றல் |
| |
| |
தடுக்க நிறைபுனற் பண்ணையிற் சூன்முதிர் சங்கம்வந்து படுக்க நளின மலர்வெங்கை வாணர் பனிவரைமேல் உடுக்க வுதவினன் மாந்தழை மாமல ரொண்ணுதற்குக் கொடுக்க மதனை விடுத்தகன் றானொரு கோமகனே.
|
(302) |
| |
| புனறருபுணர்ச்சியா லறத்தொடுநிற்றல் |
| |
| |
வான்கற்ற வண்புகழ் வெங்கைபு ரேசர் மணிவரைமேற் றான்கற்ற கல்வி தளர்வூ டுதவுந் தகையெனவே தேன்கற்ற மென்மொழி யாள்வரு நீரொடு செல்பொழுதில் ஊன்கற்ற வேலுர வோனொரு வேந்த னுதவினனே.
|
(303) |
| |
| களிறுதருபுணர்ச்சியா லறத்தொடுநிற்றல் |
| |
| |
ஐங்கைக் களிறு தரும்வெங்கை வாண ரணிவரைமேல் வெங்கைக் களிறு தனைப்பாய் வுறவர மெய்ந்நடுங்கிக் கொங்கைக் களிறு புறம்பாய் வுறப்புல்லிக் கொண்டனள்வேற் செங்கைக் குமரனை யன்னா னொருவனைத் தேமொழியே.
|
(304) |
| |
|
| |
299. கனம்-முகில். வேறுபடல்-பகைத்தல். புரிகுழல்-அன்மொழித் தொகை. தனம்பேறு படல்-பசத்தல். செவ்வரிக்கண்ணி என்றது பாங்கியை. 300. வீடு-வீடுபேறு. காட்டை விரும்பியுறை தெய்வம்-வனதேவதை. பாடு-துன்பம். 301.01. பொன்னோய்-பொன்போன்றவளாகிய தலைவியினுடைய துன்பத்தை. வெறி-வெறியாடல். 302.02. பண்ணை-வயல். உதவல்-கொடுத்தல். ஒண்ணுதல்-அன்மொழித் தொகை. 303.03. வான்-ஆகு பெயர். உதவல்-கைகொடுத்தல். வருநீர்-புதுவெள்ளம். 304.04. தேமொழி என்றது செவிலியை. தலைவியை எனக்கொள்ளுதலும் அமையும். புல்லல்-தழுவல். தேமொழி-அன்மொழித் தொகை.
|
|
|
|