முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
பாங்கி தலைவிக்குடன்போக்குணர்த்தல்
தேவியுஞ் சம்புவு நீங்காத வெங்கைச் செழுஞ்சிலம்பர்
காவியுங் கஞ்சமு மாம்பலும் பூத்துக் கவின்கனியும்
வாவியும் பெண்ணணங் கென்றார் கதிர்தெறும் வன்சுரத்திற்
காவியுங் கண்ணு மமுதமும் போன்றொளி ராரணங்கே.
(313)
தலைவி நாணழிவிரங்கல்
ஊணிலை யாகநஞ் சுண்டோன் றிருவெங்கை யூரனைய
வாணிலை யாகு மதர்விழி யாய்முன் வனைந்திருந்த
பூணிலை யாகு மவயவம் பொலிவழிவார்
நாணிலை யாகிற் றனுவாற் பயனென்னை நங்கையர்க்கே.
(314)
கற்புமேம்பாடு பூண்முலைப்பாங்கி புகறல்
சேண்போலு மேனியர் தென்வெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்
பாண்போலு மென்மொழிச் செந்துவர் வாய்மலர்ப் பாவையன்னாய்
பூண்போலு நாண்முத லெல்லாமு மங்கலப் பூங்கழுத்தில்
நாண்போலு மாணுறுங் கற்பொன்று மேகுல நாரியர்க்கே.
(315)
தலைவி யொருப்பட்டெழுதல்
நரைப்பால் விடையர் பிறையார் சடையர்மெய்ஞ் ஞானமயர்
வரைப்பாவை பங்கர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
உரைப்பா ருரைப்பவை யெல்லா முரைக்க வுனக்கிசைவேற்
றிரைப்பாவை யேசெல்லு வேனன்ப ரோடருந் தீச்சுரமே.
(316)

313.13. சம்பு-சிவபெருமான். கவின் கனிதல்-அழகு முதிர்தல். தெறும்-வருத்தும். வன்சுரம்-வலிய பாலைநிலம். 314.14. வாள் நிலையாகும்-வாளினது தன்மையைப் போன்ற. மதர்-மதர்த்த.பொலிவு-அழகு. ஊண்-ஆகுபெயர். 315.15. சேண்-ஆகாயம். பாண்போலும்-இசையைப் போலும். செந்துவர்-செம்பவளம். மாண்உறும்-மாட்சிமை பொருந்திய. திகம்பரராகையால் சேண்போலு மேனியர் என்றார். 316.16. நரைப்பால்-மிகுவெண்மை. வரைப்பாவை-உமாதேவி. இசைவு-உடன்பாடு. திரைப்பாவையே என்றது பாங்கியை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்